மலேசியாவிவுக்குள் நுழையும் அனைத்து சிங்கப்பூர் வாகனங்களும் வாகன நுழைவு அனுமதி (விஇபி) வில்லையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறை அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து கட்டாயமாகும்.
இந்நிலையில், உட்லண்ட்சில் உள்ள விஇபி முனையம் கூடுதல் சேவைகளை வழங்க வேண்டும் என்று சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று திறக்கப்பட்ட அந்த முனையம், வெறும் தகவல் அளிக்கும் முனையமாக இருக்காமல் விஇபி விண்ணப்பங்களை ஏற்கும், அதற்கான ஆர்எஃப்ஐடி வில்லையைப் பொருத்தும் இடமாகவும் இருக்க வேண்டும் என்று ம் குரல்கள் எழுந்துள்ளன.
உட்லண்ட்சில் உள்ள விஇபி முனையத்தில் விஇபி ஆர்எஃப்ஐடி வில்லையைப் பொருத்த, பெற முடியாது என்று கேள்விப்பட்டதும் சிங்கப்பூரரான திருவாட்டி லீ மிகுந்த ஏமாற்றமடைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
“வாகன நுழைவு அனுமதிக்கு இணையம் மூலம் விண்ணப்பம் செய்ய கடந்த வாரத்திலிருந்து முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதன்மூலம் எனது ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை.
“உட்லண்ட்ஸ் அலுவலகத்திற்குச் சென்று தகவல் பெறும்படி என் நண்பர்கள் என்னிடம் கூறினர். ஆனால் ஒருநாளுக்கு அதிகபட்சம் 100 பேர் மட்டுமே அங்கு சென்று தகவல் பெற முடியும் என்று எனக்குத் தெரியவந்துள்ளது,” என்று 59 வயது திருவாட்டி லீ கூறினார்.
மலேசியாவின் விதிமுறைகளை மதித்து, அவற்றுக்கு உட்பட்டு நடக்கத் தாம் தயாராக இருப்பதாகக் கூறிய திருவாட்டி லீ, விஇபி வில்லைப் பொருத்தும் அதுதொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளும் முறை பொதுமக்களுக்கு எளிதாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
உட்லண்ட்சில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று, ஒவ்வொரு முறையும் எவ்வித தகவலும் பெற முடியாமல் திரும்புவது விரக்தி அளிப்பதாக 40 வயது திருவாட்டி ஜெனட் டான் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாருவில் உள்ள டங்கா பே பகுதியில் விஇபி அலுவலகம் இருக்கிறது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று அங்கு சென்றார்.
சிங்கப்பூரிலும் விஇபி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
விஇபி தொடர்பாகத் தகவல் பெற சிங்கப்பூரர்கள் ஜோகூர் வரை செல்லத் தேவை இருக்காது என்று அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

