மேம்பட்ட தொழில்நுட்பங்களின் துணையுடன் மெய்நிகர், ‘இம்மர்சிவ்’ எனும் பல்லுணர்வு அனுபவம், கண்காட்சி, உணவு, உடைகள் உள்ளிட்டவற்றுடன் களைகட்டவுள்ளது ‘சிங்கப்பூர் முஸ்லிம் ஃபெஸ்டிவல் 2025’.
ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் சார்பில் கடந்த நான்காண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி, இவ்வாண்டு பிப்ரவரி 7 முதல் 9 வரை சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கம் 6ல் நடைபெறவுள்ளது.
அறை முழுவதும் நிரம்பும் அளவு 90 மீட்டர் நீளம் கொண்ட ‘எல்இடி’ திரையில் முஹம்மது நபிகளின் வரலாற்றுப் பயணம் திரையிடப்படவுள்ளது. ‘மெட்டாவர்ஸ்’ எனும் தொழில்நுட்பம் மூலம் புனித கஃபா, முகம்மது நபியின் வீடு, அல் அக்ஸா மசூதி உள்ளிட்ட புனிதத் தலங்களைக் கண்டுணரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் மெய்நிகர் தளம் மூலம் ‘சுரா அல் ஃபிர், மக்காவிலிருந்து மதீனாவுக்கான பயணம் உள்ளிட்டவற்றை அனுபவபூர்வமாக உணரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட அதற்கான கருவிகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
சிறுவர்களுக்கும் முஸ்லிம் சமயம் சார்ந்த நல்ல கருத்துகள் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் புனித அல்குர்ஆன் அடிப்படையிலான உயிரோவியத் தொடர் காட்சிப்படுத்தப்படும்.
இவை தவிர அனைத்துலக அளவிலும் தமிழ், மலாய், ஆங்கில மொழிகளில் சொற்பொழிவுகள் இந்நிகழ்வில் இடம்பெறும். மேலும், புராதனக் கலைப் பொருள்கள், அறிய கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்டவையும் காட்சிக்கு வைக்கப்படும்.
கடந்த 1932ல் தொடங்கிய ஜாமியா சிங்கப்பூர், தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், முஸ்லிம்கள் மட்டுமன்றி, பல்வேறு சமயம், இனத்தைச் சார்ந்தோருக்கும், முஸ்லிம்களின் கலாசாரம், நம்பிக்கை, வரலாற்றுக் கூறுகள் உள்ளிட்டவை குறித்து தெரியப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக அமைப்பு குறிப்பிட்டது.
“இக்கால சிறுவர்களும், இளையர்களும் நீண்ட கதைகளைக் கேட்கவோ, படிக்கவோ விரும்புவதில்லை. அவர்களுக்குப் பிடித்த முறையில், நற்கருத்துகளைக் கூற தொழில்நுட்பத்தை நாடியுள்ளோம்,” என்றார் இவ்வமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் எச்எம் சலீம்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து, “அனைத்துச் சமயத்தினருக்கும் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள், கலாசார நம்பிக்கைகள் குறித்து தெரியப்படுத்த இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம். சிங்கப்பூரின் பல்லின கலாசாரத்தில், இவை போன்ற நிகழ்ச்சிகள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும் உதவும்,” என்றார் அவர்.
கடந்த 2023ல் 70,000 பேரும், 2024ல் 100,000 பேரும் நிகழ்ச்சிக்கு வருகையளித்தனர் என்றும் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
அதற்குரிய வகையில், குழந்தைகள், மூத்தோர் உள்ளிட்டோருக்கு தனி வரிசை உள்ளிட்ட பல கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏறத்தாழ 170 உணவு, உடை, பொருள்கள், செயல்பாடுகளை உள்ளடக்கிய சிறு கடைகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும்.