மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூர் தகவமைத்துக்கொள்ள வேண்டும்: மூத்த அமைச்சர் லீ

மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப சிங்கப்பூர் தகவமைத்துக்கொள்ள வேண்டும்: மூத்த அமைச்சர் லீ

கஸக்ஸ்தானின் நசர்பாயேவ் பல்கலைக்கழகம் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு கௌரவ பேராசிரியர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1 of 3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Aug 2026 - 9:08 pm

2 mins read

அஸ்தானா: உலகளாவிய சூழல் நிச்சயமற்றதாக மாறிவரும் நிலையில், சிங்கப்பூர் தொடர்ந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதை எப்போதும் சீராக இருந்ததில்லை. சூழலுக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றியமைப்பதே நாட்டின் பலம் என்று கஸக்ஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் உள்ள நசர்பாயேவ் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) உரையாற்றிய திரு லீ குறிப்பிட்டார்.

மாறிவரும் புதிய சூழலை எதிர்கொள்ள சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய ஐந்து அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு ‘கௌரவப் பேராசிரியர் (Honorary Professorship) பட்டத்தை அஸ்தானா, நசர்பாயேவ் பல்கலைக்கழகத் தலைவர் வக்கார் அகமது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) வழங்கிச் சிறப்பித்தார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு ‘கௌரவப் பேராசிரியர் (Honorary Professorship) பட்டத்தை அஸ்தானா, நசர்பாயேவ் பல்கலைக்கழகத் தலைவர் வக்கார் அகமது வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) வழங்கிச் சிறப்பித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து முக்கிய அம்சங்கள்

முதலாவதாக, வணிகத் தடைகளை அதிகரிக்காமல் வெளிப்படையான கொள்கை, வெளிப் பார்வையைக் கொண்டிருப்பது. இரண்டாவது, பன்முகத்தன்மையை ஆதரித்து உலகளாவிய உறவுகளை வலுப்படுத்துவது. மூன்றாவது, சந்தை நெறிமுறைகளுடன் அரசாங்கத் தலையீட்டையும் இணைத்து உள்கட்டமைப்பு, திறன்களில் முதலீடு செய்யும் அணுகுமுறை.

நான்காவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு, விமானம், துறைமுகம், நிதித்துறையை மேம்படுத்தி, பொருளியலை மீண்டும் மீண்டும் சீரமைப்பது. ஐந்தாவதும் மிகவும் முக்கியமானதுமான, வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதிசெய்து சிங்கப்பூரர்கள் ஒற்றுமையுடன் திகழவைப்பது என்றார் மூத்த அமைச்சர்.

இன, மத வேறுபாடுகளுக்கோ, ஏழை-பணக்காரர் இடைவெளிக்கோ இடம் தராமல் அனைவரும் வளர்ச்சியின் பலன்களைப் பெற வேண்டும் என்று திரு லீ குறிப்பிட்டார்.

எந்தவொரு நாட்டின் வளர்ச்சியும் அதன் வரலாறு, கலாசாரத்தைச் சார்ந்தே இருக்கும் என்றாலும், மனிதவளத்தில் முதலீடு செய்வதும் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதும் பொதுவான கொள்கைகள் என்று மூத்த அமைச்சர் லீ தெரிவித்தார்.

1950களில் இருந்து சிங்கப்பூர் சந்தித்த பல சவால்களையும் அதற்கு ஏற்பத் தன் பொருளியல் கொள்கைகளை மாற்றியமைத்த விதத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.

வழக்கமான வணிகப் பங்காளிகளை மட்டும் நம்பியிராமல், கஸக்ஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் சிங்கப்பூர் உறவை வலுப்படுத்தி வருகிறது என்றார் அவர்.

வெளிநாடுகளில் படிக்கும் அல்லது பணிபுரியும் சிங்கப்பூர் இளைஞர்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏற்ற வாய்ப்புகளைப் பொருளியல் வளர்ச்சி உருவாக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் நாட்டிற்குப் பங்காற்றும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் மூத்த அமைச்சர் குறிப்பிட்டார்.

நசர்பாயேவ் பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பார்க்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உடன் பல்கலைக்கழக வேந்தர் வாகர் அகமட்.
நசர்பாயேவ் பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பார்க்கும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் உடன் பல்கலைக்கழக வேந்தர் வாகர் அகமட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கஸக்ஸ்தான் - சிங்கப்பூர் ஒற்றுமை

அஸ்தானாவில் உள்ள நசர்பாயேவ் பல்கலைக்கழகத்தில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு ‘கௌரவப் பேராசிரியர்’ (Honorary Professorship) பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

120க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகளிடையே உரையாற்றிய அவர், கசகஸ்தான் நாட்டின் நிர்வாகத் துறையினருக்குப் பயிற்சி அளிப்பதில் சிங்கப்பூரின் லீ குவான் யூ பொதுக் கொள்கைப் பள்ளி ஆற்றிவரும் முக்கியப் பங்கைச் சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையே புவியியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், மனிதவள மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, நுட்பமான பொருளியல் முடிவுகள் வழியே மக்களை முன்னேற்றுவதில் இரு நாடுகளும் ஒரே சிந்தனையைக் கொண்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உலகம்கஸக்ஸ்தான்மூத்த அமைச்சர்லீ சியன் லூங்