உலகச் சவால்களுக்குச் சிங்கப்பூர் தயாராக வேண்டும்: பிரதமர் வோங்

உலகச் சவால்களுக்குச் சிங்கப்பூர் தயாராக வேண்டும்: பிரதமர் வோங்

2 mins read
ba7db377-462f-4a63-af68-40f3b53aefaf
ஆசியான் அமைப்பிற்குச் சிங்கப்பூர் அடுத்த ஆண்டு தலைமைத் தாங்கவிருப்பதைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது உரையில் குறிப்பிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உலகளாவிய சவால்களுக்கு இடையே சிங்கப்பூர் தன்னை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினப் பேரணி உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

“சிங்கப்பூர், ஆசியான் அமைப்பிற்கு அடுத்த ஆண்டு தலைமை தாங்கவிருக்கிறது. ஆசியானின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் அதை ஒருங்கிணைந்த சந்தையாக நிலைநிறுத்தவும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்யவேண்டும்,” என்றார் பிரதமர் வோங்.

சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தாலும் தன்னையும் நம்பியிருக்கவேண்டும் என்பதை அவர் சுட்டினார்.

“நாம் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட்டாலும் சிக்கல்கள் வரும்போது அவர்கள் நம்மைக் காப்பாற்ற வருவார்கள் என்று நம்பியிருக்க முடியாது. சொந்தக் காலில் நிற்க வேண்டும்,” என்றார் அவர்.

மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டபோது அங்குச் சிக்கித் தவித்த சிங்கப்பூரர்களை விரைவாக மீட்டு வந்ததையும் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

“நிலைமையைச் சரிசெய்து கொந்தளிப்பான சூழலில் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதற்கே உடனடியாக முன்னுரிமை அளித்தோம். ஆனால் அதற்கும் அப்பால் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். புதிய தொழில்நுட்பத்தை நமது சொந்த நிபந்தனைகளின்கீழ் அரவணைக்கவிருக்கிறோம். குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவளித்து எதிர்காலத்துக்கான நம்பிக்கையைக் கொடுப்போம். சிங்கப்பூரை ஒற்றுமையாகப் பாதுகாக்கும் அதேவேளை, தொடர்ந்து திறந்த மனப்பான்மையுடனும் மற்றவர்களுடன் தொடர்பைக் கட்டிக்காப்போம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அண்மைய காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு குறித்தும் பிரதமர் வோங் தமது உரையில் குறிப்பிட்டார். 

“கடந்த ஆண்டு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் வேகமான முன்னேற்றங்கள் குறித்து நான் பேசினேன். ஒரே ஆண்டில், பலர் எதிர்பார்த்ததைவிட அந்தத் தொழில்நுட்பம் இன்னும் வேகமாக வளர்ந்துவிட்டது,” என்றார் அவர். 

வர்த்தகத் துறையில் நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவது, சுகாதாரத் துறையில் நோய்களைக் கண்டறிவது, புதிய சேவைகளையும் தீர்வுகளையும் உருவாக்குவது போன்ற நன்மைகளைச் செயற்கை நுண்ணறிவு வழங்கும். 

சிங்கப்பூரை எப்போதும் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட நாடாக வைத்திருப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்