பெரிய வல்லரசுகளின் நெருக்குதலைத் தாங்கிக்கொள்ளவும், நம்பகமான அனைத்துலக நிதி மையம் எனும் நற்பெயரைப் பாதுகாக்கவும், என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் அதற்குச் சிங்கப்பூர்த் தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ கூறியுள்ளார்.
சிங்கப்பூர் கள்ளப்பொருள்களுக்கான இடமாக மாறிவிடக் கூடாது என்றார். பிளவுபட்டு வரும் உலகில் சிங்கப்பூர் நீக்குப்போக்குடன் செயல்பட வேண்டும் என்றாலும், பிற நாடுகளின் கோரிக்கைகளுக்கு எந்த அளவிற்கு வளைந்து கொடுப்பது என்பதற்கு எல்லை இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எச்எஸ்பிசி வங்கி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பேசிய அவர், “சிறிய நாடாக இருப்பதால் நமக்கு நெருக்கடிகள் வரலாம். ஆனால், ஓர் எல்லைக்கு மேல் நாம் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். நாம் நமது தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
‘பிளவுக்கோடுகள்: பிளவுபட்ட உலகில் முதலீடு செய்தல்’ (Fault lines: Investing In A Fragmented World) எனும் கருப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிங்கப்பூர் அனைத்துலக நிதி, சொத்து மேலாண்மை மையமாகச் செயல்படுவது குறித்து ஆய்வுகள் அதிகரித்து வரும் சூழலில், வலுவான நிறுவனங்கள், ஒழுங்குமுறை நம்பகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூருக்கு உள்ள நற்பெயரே, உலகளாவிய மூலதனத்தை ஈர்ப்பதில் முக்கியக் காரணியாக விளங்குகிறது என்றார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிங்கப்பூர் செயல்பட முடியாது என்று கூறிய அவர், மெகாஸ்பீட் நிறுவனம் தொடர்பான சர்ச்சையில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சிங்கப்பூரின் பங்கைத் திரித்துக் கூறியதற்கு அரசாங்கம் உறுதியாகப் பதிலளித்ததைச் சுட்டிக்காட்டினார்.
ஆதாரமின்றிப் பிறர் சொல்வதற்காக ஒருவரைத் தடுத்து வைக்கவோ பொருள்களைப் பறிமுதல் செய்யவோ முடியாது என்றார் அவர்.
கடந்த 1994ஆம் ஆண்டு மைக்கேல் ஃபே வழக்கையும் நினைவுகூர்ந்த அவர், அச்சம்பவத்தினால், அப்போதைய பிரதமர் கோ சோக் டோங் மூன்று ஆண்டுகளுக்கு வெள்ளை மாளிகைக்குச் செல்ல முடியாமல் போனாலும், கொள்கைகளில் சமரசம் செய்யாததால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடையே சிங்கப்பூரின் மதிப்பு உயர்ந்தது என்றார்.
“நீக்குப்போக்குடன் செயல்படுகிறோம். ஆனால் அது ஒரு எல்லைக்கு மேல் முடியாது. அதற்காக ஏதேனும் விலை கொடுக்க வேண்டியிருந்தால், அது அப்படியே ஆகட்டும்,” என்றும் அவர் கூறினார்.
உலகம் ஒரு பெரும் மாற்றத்திற்குள் நுழைந்துள்ளதாகக் கூறிய திரு இயோ, இந்த மாற்ற நிகழ்வின்போது நாடுகள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, பொருளியல் உறவுகள், தேசியப் பாதுகாப்பு, அரசியல் பரிமாணங்களுடன் மேலும் மேலும் பின்னிப் பிணைந்து வரும் சூழலில், தனது செயல்பாட்டுச் சுதந்திரத்தைத் தக்கவைத்துக்கொள்ள நீக்குப்போக்கும் உறுதியும் கலந்த அணுகுமுறை அவசியமாகும் என்றார்.
அமெரிக்க டாலர் மதிப்புச் சரிவு, செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி, மத்திய கிழக்குப் பதற்றம் போன்ற அபாயங்களை முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
நிச்சயமற்ற உலகில், சிங்கப்பூர் பெற்றுள்ள நம்பிக்கையே அதன் மிகப் பெரிய சொத்தாகும் என்றும், அதற்கு எங்கு எல்லைக் கோடு போடுவது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
