சிங்கப்பூர் எதிர்காலத்தில் வரக்கூடிய அபாயங்கள் குறித்து தெளிந்த பார்வையைக் கொண்டிருக்கவேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். உலக அமைப்புகள் வலுவிழந்து வருவதாலும் அனைத்துலக வழக்கங்கள் தேய்வதாலும் சிங்கப்பூர் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வரிவிதிக்க முடிவெடுத்த அண்மைய செய்தியைச் சுட்டிய பிரதமர் வோங், சிங்கப்பூர் இன்னும் பல அதிர்ச்சிகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றார்.
“இன்னும் அதிக நாடுகள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் நடந்துகொள்வதோடு வேண்டியதைப் பெற பலத்தைப் பயன்படுத்தலாம் அல்லது நெருக்கடி தரலாம். இதுதான் இன்றைய உலகின் கசப்பான உண்மை,” என்றார் பிரதமர் வோங்.
அதிபர் டிரம்ப், சிங்கப்பூர் உட்பட முக்கியப் பங்காளித்துவ நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பெரும்பாலான பொருள்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று புதன்கிழமை (ஏப்ரல் 2) அறிவித்தார். இன்னும் பல நாடுகளுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
அனைத்துலகக் கட்டமைப்பில் அது அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாகச் சொன்ன பிரதமர் வோங், விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட உலகமயமாதலும் தடையற்ற வர்த்தகமும் இதன்மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் குறிப்பிட்டார்.
“உலகம் புது யுகத்துக்குள் நுழைகிறது. அது தன்னிச்சையானது, தன்னைப்பேணித்தனப் போக்குடையது, ஆபத்தானது. உலகத்தின் தடையற்ற சந்தைப் பொருளியல்களுக்கு அமெரிக்காதான் நீண்டகாலமாக திடமான அடித்தளமாக இருந்தது. தெளிவான விதிமுறைகள் மூலம் தடையற்ற வர்த்தகத்தை அது முன்னிறுத்தியதோடு பலதரப்பு வர்த்தகக் கட்டமைப்பையும் வழிநடத்தியது. அதன்மூலம் அனைத்து நாடுகளும் பயனடைந்தன,” என்றார் பிரதமர் வோங்.
அமெரிக்கா, உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பு மூலம் அசைக்கமுடியாத நிலைத்தன்மையையும் செழிப்பையும் உலக நாடுகளுக்கும் தனக்கும் கொண்டுவந்தது என்று பிரதமர் வோங் கூறினார்.
அந்தக் கட்டமைப்பு மிகச் சிறந்ததன்று எனக் கூறிய அவர், சிங்கப்பூரும் பல நாடுகளும் நீண்டகாலமாக விதிமுறைகளில் காலத்திற்கேற்ப சீர்திருத்தம் செய்யும்படி கூறியதைச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், அமெரிக்கா தற்போது செய்வது சீர்திருத்தமன்று. அது உருவாக்கிய கட்டமைப்பை அதுவே இப்போது கைவிடுகிறது.
“பதிலுக்குப் பதில் வரிவிதிக்கும் புதிய அணுகுமுறைமூலம் உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பை அமெரிக்கா முழுமையாக நிராகரிக்கிறது,” என்று பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூர்மீது அமெரிக்கா விதித்திருக்கும் 10% வரி இப்போதைக்குப் பேரளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் விரிவான பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றார் திரு வோங்.
சிங்கப்பூர் அதன் திறன்களை வளர்த்துக்கொள்ளும் என்றும் பங்காளித்துவ நாடுகளுடனும் தன்னைப்போல சிந்திக்கும் நாடுகளுடனும் உள்ள உறவை வலுப்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.