தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய உலக சவால்களுக்குச் சிங்கப்பூர் தயாராக வேண்டும்: துணைப் பிரதமர் கான்

2 mins read
6f646f3a-eae7-41f6-8372-1538725c1d1d
டிபிஎஸ் வங்கி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வர்த்தகர்களிடையே உரையாற்றினார் துணைப் பிரதமர் கான் கிம் யோங். - படம்: டிபிஎஸ் வங்கி

சிங்கப்பூர் இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சியைப் பாதிக்கும் அம்சங்களை நிர்வகிக்கும் அதேநேரம், புதிய பொருளியல் மற்றும் புவிசார் அரசியல் சூழலைச் சந்திக்கவும் தயாராக வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.

தன்னைப்பேணுதல், தனக்குத் தோன்றியதைச் செய்தல் மற்றும் ஆபத்துகளால் சூழப்பட்டு உள்ளது தற்போதைய புவிசார் அரசியல் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

டிபிஎஸ் வங்கி வியாழக்கிழமை (ஏப்ரல் 17) காலை ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்புகளால் வர்த்தகமும் முதலீடுகளும் முடங்கிவிடாமல் பாதுகாக்க சிங்கப்பூரும் உலகம் முழுவதும் உள்ள அதன் வர்த்தகக் கூட்டாளிகளும் போராட வேண்டி இருக்கும் என்றார்.

அதேநேரம், தனது வர்த்தகப் பங்காளித்துவத்தை விரிவுபடுத்த ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் பணியாற்றும் என்றும் திரு கான் தமது உரையில் குறிப்பிட்டார்.

“மேலும், புதிய வர்த்தகக் கூட்டணிகளை உருவாக்கவும் பலதரப்பு வர்த்தக முறையைச் சீர்ப்படுத்தி வலுவாக்கும் முயற்சியிலும் சிங்கப்பூர் ஈடுபடும்.

“இதுபோன்ற நடவடிக்கைகள் புதிய சந்தைகளைக் கண்டறியவும் விநியோகத் தொடர்புகளைப் பலப்படுத்தவும் வர்த்தகங்களுக்குத் தேவைப்படும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்,” என்றார் துணைப் பிரதமர்.

அமெரிக்காவில் இருந்து வரும் பொருள்களுக்குச் சிங்கப்பூர் வரி ஏதும் விதிப்பதில்லை. ஆனால், அமெரிக்காவில் இறக்குமதியாகும் சிங்கப்பூர் பொருள்களுக்கு அடிப்படை வரி 10 விழுக்காடு விதிக்கப்படுவதாக திரு டிரம்ப் அண்மையில் அறிவித்து இருந்தார்.

அது குறித்துப் பேசிய திரு கான், “இந்த வரிவிதிப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் இருப்பது போலத் தோன்றவில்லை. மாறாக, அமெரிக்காவுடன் எத்தகைய வர்த்தக ஏற்பாடுகள் உள்ளன என்பதைப் பொருட்படுத்தாது, குறைந்தபட்ச நிலையான வட்டி விகிதம் ஏற்படுத்தப்படும் நிலை ஏற்படலாம்.

“ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் வரியுடன், இனி வரும் வாரங்களிலோ மாதங்களிலோ கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்கா உணர்த்தி உள்ளது.

“குறிப்பாக, பகுதி மின்கடத்தித் துறை மற்றும் மருந்தியல் துறைகளுக்குப் புதிய வரிகளை அமெரிக்கா விதிக்கக்கூடும். அந்த இரு துறைகளும் சிங்கப்பூர் ஏற்றுமதியில் பெரும் பங்கை வகிப்பவை. அண்மைய ஆண்டுகளில் அந்தத் துறைகளுக்குத்தான் பல நாடுகளில் இருந்து பெரும்பாலான முதலீடுகள் செய்யப்பட்டன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்