உலகம் முழுமையாக மாறிவிட்டது என்றும் நிச்சயமற்ற சூழலைக் கையாள சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அறைகூவல் விடுத்துள்ளார்.
கெபுன் பாருவில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த அமைச்சர் லீ, சிங்கப்பூரில் நாம் ஒன்றுபட்ட மக்களாகச் செயல்படவேண்டும் என்றும் அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மூத்த அமைச்சர் லீ, சிங்கப்பூர் உட்பட பல நாடுகள்மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்த வரிகளைச் சுட்டினார்.
“அது நம் வர்த்தகத்தைப் பாதிக்கும், நம் பொருளியலைப் பாதிக்கும், நம் வட்டாரத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். அது நமக்கு நல்ல செய்தியன்று,” என்றார் திரு லீ.
எனவேதான் பிரதமர் லாரன்ஸ் வோங் உலகம் எப்படி மாறியுள்ளது, நம் பாதுகாப்பையும், பிள்ளைகளையும், எதிர்காலத்தையும் அது எப்படி பாதிக்கும் என்பதை விளக்கும் காணொளி ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ்ஜி60 சிங்கப்பூரை இன்னும் சிறந்த நாடாக மாற்ற சிங்கப்பூரர்களைத் தயார்ப்படுத்தும் தருணம் என்று திரு லீ சொன்னார்.
சிங்கப்பூரர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் வெற்றிகரமானதாகவும் இருப்பதற்கு அது உதவும் என்றார் அவர்.
“நாம் தனி மனிதர்கள் அல்லர். இது ஒரு சிங்கப்பூர் அணி,” என்ற திரு லீயை கெபுன் பாரு ஈரச்சந்தை, உணவங்காடி நிலையத்துக்கு வந்திருந்த பலர் உற்சாத்துடன் வரவேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் நாம் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு நாம் கடினமாக உழைத்ததே காரணம் என்ற மூத்த அமைச்சர் லீ, குடியிருப்பாளர்களை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும்படி அறிவுறுத்தினார்.
“உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுக்கும் உங்களை நல்லபடியாகப் பார்த்துக்கொண்டு சிங்கப்பூரை முன்னெடுத்து செல்லக்கூடியோருக்கும் வாக்களியுங்கள்,” என்று திரு லீ சொன்னார்.

