உலக அளவிலும் ஆசிய அளவிலும் சிங்கப்பூர் துறைமுகம் ஆகச் சிறந்த கடல்துறைமுகமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற ஆசிய சரக்கு, தளவாடம் மற்றும் விநியோகத் தொடர் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிங்கப்பூர் துறைமுகத்திற்குப் பெருமை சேர்க்கப்பட்டது.
ஆசிய அளவில் சிறந்த துறைமுகம் என்ற சிறப்பை சிங்கப்பூர் பெறுவது இது நான்காவது முறை.
அதேபோல, ஆசியாவின் சிறந்த துறைமுகமாக சிங்கப்பூர் துறைமுகம் 37வது முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்து உள்ளது.
சரக்கு மற்றும் தளவாடத் துறை சஞ்சிகையான ஏஷியா கார்கோ நியூஸ் அந்த வருடாந்தர நிகழ்வை நடத்தியது.
சேவை உன்னதம், புத்தாக்கம், நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்து விளங்கும் முன்னணி தளவாட, விநியோகத் தொடர் சேவை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
சஞ்சிகையின் 15,000க்கும் மேற்பட்ட வாசகர்கள் கடல்துறை முன்னணி நிறுவனங்களை முன்மொழிந்து வாக்களிப்பர்.