சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம், 2025/2026 நிதியாண்டில் $8.42 மில்லியனை ரொக்க நன்கொடையாகப் பெற்றுள்ளது. 2024/25 நிதியாண்டின் $5.01 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
கலைக்கூடத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு அறக்கட்டளை விருந்து மட்டுமே சாதனை அளவாக $2.8 மில்லியனைத் திரட்டியது. சிங்டெல் நிறுவனம் மேலும் 10 ஆண்டுகளுக்குத் தனது பங்களிப்பை நீட்டித்துள்ளது.
கலைக்கூடத்தின் 15 கண்காட்சிகளையும் விழாக்களையும் 2.28 மில்லியன் பேர் கண்டு களித்தனர். நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்த வருவாய் $5.52 மில்லியனாக உயர்ந்தது. கலைக்கூடத்தின் கேலரி இன்சைடர்சின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்குக்கும் மேல் அதிகரித்து, 15,500 ஆனது.
அரசாங்க மானியங்கள் $57.92 மில்லியனாக உயர்ந்தபோதிலும், செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து, மொத்தச் செலவினம் $93.5 மில்லியனை எட்டியது.
மெக்சிகோ, சீனா என இரு நாடுகளுக்குச் சொந்தக் கண்காட்சிகளைக் கொண்டு சென்றது கலைக்கூடத்தின் முக்கிய மைல்கல்லாகும். பொதுமக்கள் அனைவரும் வந்து செல்லும் முன்னணிக் கலைக்கூடமாக இது தொடர்ந்து இயங்கும் என்று அதன் தலைவர் பீட்டர் ஹோ நம்பிக்கை தெரிவித்தார்.


