நாடுகளுடன் நட்புறவுகொள்ள காமன்வெல்த் போன்றவை சிங்கப்பூருக்கு அவசியம்: பிரதமர் வோங்

2 mins read
2a69884d-e3bc-4b28-9b00-20d61ecdb82a
சமோவாவில் நடைபெற்ற காமல்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் கூட்டத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (அக்டோபர் 26) பிரதமர் லாரன்ஸ் வோங் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக நாடுகள் தனித்தனிப் பாதையில் செல்லக்கூடிய காலகட்டத்தில், மற்ற நாடுகளுடனான நட்பை வலுப்படுத்தி உறவுகளைப் பராமரிக்க காமன்வெல்த் கூட்டமைப்பு போன்ற குழுக்களை சிங்கப்பூர் விரும்புகிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.

“அதனால்தான் காமன்வெல்த் என்னும் ஒரு குழுவுடன் மட்டுமல்லாமல் அதன் 55 நாடுகளுடன் தனித்தனியாகவும் நட்புறவு கொள்வதில் சிங்கப்பூர் தொடர்ந்து நன்மதிப்பை காண்கிறது,” என்றும் அவர் சனிக்கிழமை (அக்டோபர் 26) கூறினார்.

“சிங்கப்பூர் எந்த அளவுக்கு வெளிப்படையானது என்பதைக் கருத்தில்கொள்ளும்போது அதுபோன்ற தொடர்புகள் அவசியம்.

“அதனால்தான், அதிக நாடுகளை நட்பாக்கிக்கொள்வதிலும் அவற்றுடன் இணைந்து பணியாற்றுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதிலும் சிங்கப்பூர் நாட்டமாக உள்ளது,” என்றார் அவர்.

தென்பசிபிக் தீவு நாடான சமோவாவில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்களின் கூட்டத்தின் நிறைவுநாளில் திரு வோங் செய்தியாளர்களிடம் பேசினார். அந்தக் கூட்டம் திங்கட்கிழமை (அக்டோபர் 21) தொடங்கி ஆறு நாள்களுக்கு நடைபெற்றது.

“தற்போதைய புதிய உலகச் சூழல் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் சிங்கப்பூர் போன்ற தாராள பொருளியல் நாடுகளுக்கும் நட்பினிமை அற்றதாகத் தோன்றலாம். அதனால், நமது முயற்சிகளை பன்மடங்காக்கி உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

ஆறு கண்டங்களைச் சேர்ந்த, முன்னேற்றத்தின் வெவ்வேறு கட்டத்தில் இருக்கும் 56 நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்றுள்ள காமன்வெல்த் அமைப்பின் ஒற்றுமை தனித்துவமானது என்று திரு வோங் பாராட்டினார்.

வட்டார அளவில் ஆசியானும் உலக அளவில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் நாடுகளின் கூட்டமைப்புகளுக்கு உதாரணம் என்று அவர் ஒப்பிட்டுப் பேசினார்.

“காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்று உள்ள நாடுகள் முன்னேற்றத்தின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கின்றபோதிலும் அவை எல்லாவற்றிடம் இருந்தும் சிங்கப்பூர் கற்றுக்கொள்ள முடியும்.

“அவற்றில் முக்கியமான அம்சம் பருவநிலை மாற்றம். வெப்பநிலை அதிகரிப்பதும் கடல்நீர்மட்டம் உயர்வதும் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்று உள்ள பல பசிபிக், கரீபிய நாடுகளுக்கும் ஆபத்தைத் தரக்கூடியவை.

“அதனால், அவற்றில் பல நாடுகள் கரிமக் குறைப்பிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலும் அதிகக் கவனம் செலுத்துகின்றன.

“இதுபோன்ற அம்சங்களில் நமது கருத்துகளையும் யோசனைகளையும் பரிமாறிக்கொள்ள முடியும். சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்வதோடு ஒன்றுபட்டு இயங்குவதற்கான புதிய வழிகளையும் கண்டறிய முடியும்,” என்று பிரதமர் வோங் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்