நிலையற்ற உலகச் சூழலில் சிங்கப்பூருக்கு வலுவான மசெக அரசாங்கம் தேவை: பிரதமர் வோங்

3 mins read
சுவா சூ காங் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் வோங் ஆவேசப் பேச்சு
0554cc4a-cccf-4657-8c9e-206f7d0b4dd7
சுவா சூ காங் குழுத்தொகுதி மசெக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் லாரன்ஸ் வோங் (வலமிருந்து 3வது), ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

கடந்த 60 ஆண்டுகளில் கொவிட்-19, ஆசிய நிதி நெருக்கடி எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள மசெக அரசாங்கம், நிலையற்ற உலகச் சூழலில் சிங்கப்பூரைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லவேண்டுமெனில் அதற்கு மக்களின் பேராதரவு முக்கியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கோரிக்கை விடுத்தார்.

கூட்டத்துக்குச் சிறப்பு வருகையளித்த ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டொங் முன்னிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 26) சுவா சூ காங் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்.

எதிர்க்கட்சிகள் இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தில் ஒரே வகையான யோசனைகள் எழும் என எதிர்க்கட்சிகள் கூறிவருவது குறித்துப் பேசிய அவர், “எந்த நாடு ஆக அதிகமான இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது? எந்த நாடு மின்னிலக்க ஒப்பந்தங்கள் குறித்துச் சிந்தித்துள்ளது? அனைவரும் ஒருமித்த யோசனைகளோடு இருந்தால் இதைச் செய்திருக்கக்கூடுமா?” என கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சி இருந்தாலும் இல்லாமலிருந்தாலும், மசெக தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்றும் புத்தாக்கத் தீர்வுகளை வழங்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கூடுதலான இடமிருந்தால் மசெக அணி பலவீனமாகும். ஏற்கெனவே, பல மூத்த அமைச்சர்கள் ஓய்வுபெற்றுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக இளம் தலைவர்களை நான் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தியுள்ளேன்.

“உங்களுக்கான அடுத்த தலைமுறைத் தலைவர்களை இழக்க நீங்கள் உண்மையில் தயாராக இருக்கிறீர்களா? அத்தகைய அபாயகரமான செயலைச் செய்ய இதுவா சரியான நேரம் ? நம் நாடு தலைமைத்துவ மாற்றத்தை எதிர்நோக்கும்போது, நாம் நிலையற்ற உலகச் சூழலில் சவால்களைச் சந்திக்கும்போது பலவீனமான மசெக அணியின் செயலாக்கம் தடைப்படும்,” என்று விளக்கினார் பிரதமர் வோங்.

“வெளிநாட்டவர் உங்கள் வேலைகளை எடுக்கிறார்கள் என சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிமுக) கூறுகிறது. எங்கள் அணுகுமுறை சிங்கப்பூரின் போட்டித்தன்மையை வலுப்படுத்துகிறது என நாங்கள் காட்டியுள்ளோம்.

“டிரம்ப் வரிவிதிப்புகள் தொடர்ந்தால் அமெரிக்காவுக்குத் திரும்புவதைப் பற்றிச் சிந்திப்பதாக சில பன்னாட்டு நிறுவனங்கள் என்னிடம் கூறியுள்ளன. சிமுக நாடாளுமன்றத்தினுள் வந்தால் சிங்கப்பூரிலுள்ள அரசியல் அபாயம் அதிகம் என கருதி அவை சிங்கப்பூரைவிட்டு நீங்கிவிட்டால் க‌ஷ்டப்படுவது யார்? சிங்கப்பூரர்களே,” என்றார் பிரதமர் வோங்.

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து பிரதமர் வோங்

“சிலர் 7 விழுக்காடு ஜிஎஸ்டிக்குத் திரும்ப வேண்டும் என்கின்றனர். சிலர் அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை நீக்கவேண்டும் என்கின்றனர்.

“உண்மையில், ஏற்கெனவே நமக்குப் பல படிநிலைகள் கொண்ட ஜிஎஸ்டி கட்டமைப்பு உள்ளது. “ஜிஎஸ்டி 9 விழுக்காடாக இருப்பினும் நாம் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு வழங்கும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகளால் ஒரு நடுத்தர வருமானக் குடும்பம் கட்டும் ஜிஎஸ்டி உண்மையில் 7 விழுக்காட்டைவிடக் குறைவுதான்.

“யார் அந்த 9 விழுக்காட்டைச் செலுத்துகின்றனர்? வெளிநாட்டவரும் உயர் வருமானம் ஈட்டுபவரும்தான்.

அரசாங்கம் பற்றுச்சீட்டுகளை மட்டும் கொடுக்கிறது எனச் சிலர் கூறுகின்றனர். அது முற்றிலும் தவறு. நாங்கள் நல்ல வேலைகளை உருவாக்குகிறோம். வீடு கட்டும் வேகத்தைக் கூட்டுகிறோம். பெரிய குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவுகிறோம். மத்திய சேமநிதிக் கணக்கை எப்படி மேம்படுத்துவது என ஆராய்ந்துவருகிறோம். இதுபோல் எத்தனையோ நல்ல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம்,” என்றார் பிரதமர் வோங்.

“நாங்கள் உங்கள் நம்பிக்கையான கட்சி. வாழ்வின் கடினமான சூழல்களில் எங்கள்மீது நம்பிக்கை வைத்தீர்கள். எதிர்காலத்திலும், என்ன சவால்களைச் சந்தித்தாலும் நாங்கள் உங்களுக்காகப் பாடுபடுவோம் என நீங்கள் நம்பிக்கை வைக்கலாம்,” என்றார் பிரதமர் வோங்.

‘சிவப்புப் புள்ளியன்று, சீறிப்பாயும் தோட்டா’

வாக்காளர்கள் வலுவான ஆதரவை வழங்கும்போது வாக்குறுதியை நிறைவேற்றுவதும் எளிதாக இருக்கும் என்று சுவா சூ காங் குழுத்தொகுதி மசெக அணியை வழிநடத்தும் அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

“நீங்கள் என்னை ஆற்றல்படுத்தினால் நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; நான் வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது என் சொந்த மக்கள் எனக்குப் பக்கபலமாக உள்ளார்கள் என்ற நம்பிக்கையோடு சிறப்பாகச் செய்வேன். நீங்கள் வேலை செய்யத் தயாராக இருக்கும்வரை, நீங்கள் முயற்சி செய்யத் தயாராக இருக்கும்வரை உங்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரிப்போம் என்பது மசெக அரசாங்கத்தின் வாக்குறுதி,” என்று திரு டான் உறுதிபடக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்