புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரவு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (சிமுக) தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மழை பெய்ததில் திடல் ஈரமாக இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் திரளாகக் கூடினர் மக்கள்.
புக்கிட் கோம்பாக் தனித்தொகுதி வேட்பாளர் ஹரிஷ் பிள்ளை, அக்கட்சியைப் பிரதிநிதித்துப் பேசினார்.
கட்சித் தலைவர் டான் செங் போக் உட்பட சுவா சூ காங், வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி வேட்பாளர்களும் பிரசாரத்தில் கலந்துகொண்டனர்.
மூத்தோர், ஊழியர்கள், வசதி குறைந்தோருக்கு மேம்பட்ட ஆதரவு, அனைவரையும் உள்ளடக்கும் நம்பகமான, நியாயமான ஒரு வலுமிக்க சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு என்ற கொள்கைகளின் அடிப்படையில் திரு ஹரிஷ் பேசினார்.
“ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் வலுவான சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு தேவை. எவரும் பின்தங்கிவிடக்கூடாது,” என்றார் அவர்.
அறுபதுக்கும் மேற்பட்ட கொள்கைப் பரிந்துரைகளுடன் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை சிமுக மேம்படுத்தும் என திரு ஹரிஷ் உறுதியளித்தார்.
மேலும், தமது கட்சி அறிக்கையின்படி மெடிஷீல்ட் லைஃப், கேர்ஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டங்களின் மூலம் அரசாங்கம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சுவா சூ காங் குழுத்தொகுதி சிமுக வேட்பாளர் சி.நல்லகருப்பன், தைப்பூசத்துக்குப் பொது விடுமுறை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
2020 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் விலைவாசி உயர்ந்திருப்பதற்கு பல உதாரணங்களை அவர் சுட்டினார். ஆனால், சம்பளம் மட்டும் உயராததை அவர் குறைகூறினார்.
பொருள், சேவை வரி உயர்வைக் கண்டித்த திரு நல்லகருப்பன், அது பழையபடி 7 விழுக்காடாகக் குறைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“திறன் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தும், சிங்கப்பூரர்களுக்கு இன்னமும் போதிய வேலை கிடைக்கவில்லை. எனவே, திறன் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தின் பலன் என்ன?” என அவர் வினவினார்.
இதற்கிடையே, டாக்டர் டான் செங் போக்கின் 85வது பிறந்தநாளுக்கு ஆதரவாளர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
நிதி ஆலோசகரான சசி குமார், 40, பிரசாரக் கூட்டத்தின் உணர்வு எப்படி உள்ளது என்பதையும் இந்தப் பொதுத் தேர்லில் பெரும்பாலான மக்கள் ஒரு மாறுப்பட்ட குரலை எதிர்பார்ப்பதுபோல் உணர்வதாகவும் கூறினார்.
பொங்கோல் குடியிருப்பாளரான அவர், அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினம் குறித்து கவலை தெரிவித்தார்.