தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடந்தகாலத்தை வண்ணமயமாக நினைவூட்டும் சிங்கப்பூர் இரவுத் திருவிழா

3 mins read
2b5d439c-7a6a-4027-9c24-8b037323ba65
ஒளியில் மின்னும் படைப்புகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய சிங்கப்பூர் இரவுத் திருவிழா 2024 களைகட்டத் தொடங்கியுள்ளது. - படம்: இபிஏ

பல்வேறு உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களின் கலைப் படைப்புகளைக் கடந்த 15 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறது சிங்கப்பூர் இரவுத் திருவிழா.

இவ்வாண்டு ‘ஆர்ட் ஆஃப் பிளே’ எனும் கருப்பொருளில் அமைந்த சிங்கப்பூர் இரவுத் திருவிழா, பிராஸ் பாசா - பூகிஸ் வட்டாரங்களில் ஆகஸ்ட் 23 தொடங்கி, செப்டம்பர் 7 வரை நடைபெற உள்ளது.

ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் கொண்டுள்ள இவ்வாண்டின் இரவுத் திருவிழாவில், பின்னோக்கிச் சென்று 1950, 1960களின் கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவற்றை நினைவுகூரும் வகையில் கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டுவரை இரு வார இறுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, இவ்வாண்டு மூன்று வார இறுதிகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

50களின் திருவிழா

வண்ண விளக்குகளால் மிளிர்ந்த ராட்டினம்.
வண்ண விளக்குகளால் மிளிர்ந்த ராட்டினம். - படம்: லாவண்யா வீரராகவன்

‘வொண்டர்வோர்ல்டு’ எனும் பெயரில் 1950களின் விளையாட்டுகளை நினைவுகூரும் விழா கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. ‘கேத்தே கிரீன்’ பகுதியில் அமைந்துள்ள இக்கிராமம், அக்கால பொழுதுபோக்குப் பூங்காவைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொம்மை இருக்கைகள் கொண்ட ராட்டினம், தின்பண்டங்கள், மக்களைக் கடந்தகாலத்திற்கு அழைத்துச்செல்லும் நாடகங்களுடன் களைகட்டியுள்ள இந்தக் கிராமம், அன்றாடம் இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பொதுமக்களின் வருகைக்காகத் திறந்திருக்கும்.

கண்கவர் ஒளிப் படைப்புகள்

90களின் விளையாட்டுகள் அடிப்படையில் அமைந்த ஒளிவீச்சுக் காட்சி.
90களின் விளையாட்டுகள் அடிப்படையில் அமைந்த ஒளிவீச்சுக் காட்சி. - படம்: லாவண்யா வீரராகவன்

இவ்விழாவின் ஒரு பகுதியாக ‘புரொஜெக்‌ஷன் மேப்பிங்’ எனப்படும் ஒளிப் படைப்புகள் சைம்ஸ் (Chijmes), பெரனாக்கான் அரும்பொருளக வட்டாரங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

குழந்தைப் பருவ விளையாட்டுகள், பொம்மைகள், தொடக்கக்கால கணினி விளையாட்டுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவை பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.

தாள் உந்துகணை (ராக்கெட்) வடிவில் அமைந்த கலைப்படைப்பைக் காண்பதுடன், அங்கே தாளில் உந்துகணை செய்து பறக்க விடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுவது பார்வையாளர்களை அவர்களின் கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

‘கறி பஃப்’ உணவுப்பண்ட வடிவத்தில் அமைந்துள்ள படைப்பு, கடந்து செல்வோர் முகத்தில் புன்சிரிப்பை வரவழைக்கத் தவறுவதில்லை.

வண்ணக் கலவை விளையாட்டு

வேறுபட்ட வண்ணத்தைக் கண்டறியும் விளையாட்டு.
வேறுபட்ட வண்ணத்தைக் கண்டறியும் விளையாட்டு. - படம்: லாவண்யா வீரராகவன்

ஒரே வண்ண உருளைகளுக்கிடையில், வேறுபட்ட வண்ணத்தில் மின்னும் தனி உருளையைக் கண்டுபிடிக்கும் பாணியில் அமைந்த விளையாட்டுசார் படைப்பால் குழந்தைகள் குதூகலிப்பர் என்பது உறுதி.

குறிப்பிட்ட நேரத்தில் அதிக முறை மாற்றுநிற உருளையைத் தொடும் இவ்விளையாட்டில் ஒவ்வொருவர் பெறும் மதிப்பெண்களும் திரையில் தோன்றுவதால் பார்வையாளர்கள் போட்டி போட்டு விளையாடுவது அப்பகுதியைச் சிரிப்பலையில் ஆழ்த்துகிறது.

புலன்களுக்கு விருந்து

நறுமணத் தூண்கள்.
நறுமணத் தூண்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

தேசிய வடிவமைப்பு நிலையத்தில் அமைந்த படைப்பு, பிற படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. அனைத்து கலைப்படைப்புகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ள நிலையில், இந்த ‘இருத்தலின் நறுமணங்கள்’ (Scents of Being) படைப்பு, நறுமணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

துணிகளாலான பெருந்தூண் போன்ற அமைப்புகளில் ஆங்காங்கே உள்ள சிறு துளைகளின்வழி மூக்கை நுழைத்து, வெவ்வேறு நறுமணங்களை உணரும் வண்ணம் அமைந்துள்ள இப்படைப்பு, புதுமையான அனுபவத்தை வழங்குகிறது.

மணத்திற்கும் மனத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நிறுவும் வண்ணம் இப்படைப்பை உருவாக்கியுள்ளதாகக் குழுவினர் தெரிவித்தனர்.

மிதிவண்டியில் ஒளிப்பயணம்

ஒளிப்படம் தாங்கிய மிதிவண்டி.
ஒளிப்படம் தாங்கிய மிதிவண்டி. - படம்: லாவண்யா வீரராகவன்

வண்ண வண்ண ஒளி அமைப்புகளைக் கொண்ட கனசதுரங்களைப் பின்னால் தாங்கிய மிதிவண்டி, காண்போரைக் கவர்கிறது. மிதிவண்டியில் ஏறி மிதித்தால் நகரும் ஒளிப்படைப்பு, இருபுறமும் பாரம்பரிய நடனத்தைக் காட்சிப்படுத்தும் ‘ஃபிளிப் புக்’ பாணிப் படங்கள் என அனைத்தும் காலத்தால் பின்னோக்கி அழைத்துச் செல்லும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மகிழ்ச்சியான நாள்கள்

இளமைக்கால நாள்களைக் கண்முன் நிறுத்தும் விதமாக, அறை முழுதும் அன்றாடக் காட்சிகளால் அமைந்த ‘வாழ்வின் மகிழ்ச்சியான நாள்கள்’ எனும் கலைப்படைப்பு.
இளமைக்கால நாள்களைக் கண்முன் நிறுத்தும் விதமாக, அறை முழுதும் அன்றாடக் காட்சிகளால் அமைந்த ‘வாழ்வின் மகிழ்ச்சியான நாள்கள்’ எனும் கலைப்படைப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறுவயதுக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் விதமாக, அறை முழுதும் அன்றாடக் காட்சிகளால் அமைந்த ‘வாழ்வின் மகிழ்ச்சியான நாள்கள்’ எனும் கலைப்படைப்பு பூகிஸ் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சேலை கட்டிய பெண்மணி, ‘பாத்திக்’ ஆடை அணிந்த இணையர், பழைய வீவக வீடுகள், மரங்கள், விளையாடும் சிறுவர்கள் எனப் பளிச்சிடும் வண்ணங்களாலும் சிரித்த முகங்களாலும் நிரம்பியுள்ள இந்த அறை, கலைகளையும் காலங்களையும் படம்பிடித்துக் காட்டும் கருவியாக விளங்குகிறது.

இவை தவிர, அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையிலான மேடை நாடகங்கள், இசை, நடன நிகழ்ச்சிகள் இவ்வாண்டு இடம்பெற உள்ளன. நிகழ்ச்சிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு இரவுத் திருவிழா 2024 இணையத்தளம், சமூக ஊடகங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்