அரசாங்கம் சரியாகச் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்க்க எதிர்க்கட்சிகள் தேவை: ஸ்பென்சர் இங்

2 mins read
9be47960-c62e-435d-9f51-efc32c2933cc
செம்பவாங் சன் பிளாசா அருகிலுள்ள திடலில் தொகுதி உலாவைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சித் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங். - படம்: லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூர் வாகனத்திலிருந்து பெருங்கப்பலாக மாறிவிட்டது என்றும் தொடர்ந்து மக்கள் செயல் கட்சி (மசெக) மட்டுமே கப்பலைச் செலுத்தினால், அதனைத் தானியங்கி ஓட்டும் முறையில்விட்டு அதிலேயே திருப்தி அடைந்துவிடக்கூடும் எனும் அச்சம் உள்ளது என்றும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சித் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங் கூறியுள்ளார்.

கப்பலிலுள்ள பயணிகளின் (சிங்கப்பூரர்கள்) நலனைக் காக்க அவர்கள் நன்கு செயல்படுகிறார்களா என்பதைச் சரிபார்க்க எதிர்க்கட்சிகள் தேவை,” என்றார் அவர்.

“ஒரு வாகனத்தை இரு ஓட்டுநர்கள் பகிர்ந்து ஓட்ட இயலாது. வாகனம் கவிழ்ந்தால் முக்கிய வாகனமோட்டியே பொறுப்பேற்கவேண்டிவரும்,” என்று செம்பாவாங் குழுத்தொகுதி மசெக வேட்பாளரும் சுகாதார அமைச்சருமான ஓங் யி காங் கூறியதற்கு திரு இங் இவ்வாறு பதிலளித்தார்.

“வரிப்பணம் எங்கு, எவ்வாறு செலவிடப்படுகிறது, அதன் மதிப்புகளை ஆய்வு செய்யவேண்டியுள்ளது. இன்னும் எல்லாக் கொள்கைகளும் எல்லா தரப்பினருக்குமானதாக இல்லை எனத் தோன்றுகிறது,” என்றார் திரு இங்.

மே தின வாழ்த்துகளைப் பகிர்ந்த அவர், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதுடன், ஒன்று நடந்த பின்னர் திட்டங்கள் வகுப்பதைவிட எந்தப் பணிகளுக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதைக் கல்வி முறையிலேயே ஆராய்ந்து, அதற்கேற்ற கல்வித் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று திரு இங் கூறினார்.

கல்விமுறை மேம்பாட்டுக்காகக் குரல்கொடுக்க விரும்புவதாகக் கூறிய அக்கட்சியின் செம்பவாங் குழுத்தொகுதி வேட்பாளர் வெரினா ஓங், வகுப்பறைகளில் அதிகபட்சம் 20 முதல் 25 மாணவர்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.

ஆசிரியர்-மாணவர் விகிதம் குறைய வேண்டும். இது, பாடமெடுப்பதையும் தாண்டி வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத்தர ஆசிரியர்களுக்கும் வாய்ப்பளிக்கும். மாணவர்-ஆசிரியர் பந்தம் மேம்படும். ஓர் ஆசிரியராக, என் மாணவர் வாழ்வில் வென்றார் எனக் கேட்பதே மகிழ்ச்சி,” என்றார் அவர்.

இவற்றை தமது கொள்கைப் பரிந்துரைகளாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங்கிடம் முன்வைப்பதாகக் கூறிய அவர், நிறைவான பணி மேற்கொள்ள முடியும் எனும் நிலை ஏற்பட்டால் பலரும் இப்பணியை மேற்கொள்ள முன்வருவார்கள் என்று தாம் நம்புவதாகக் கூறினார்.

செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வேட்பாளர்கள், சன் பிளாசா அருகே வியாழக்கிழமை (மெ 1) தொகுதி உலா மேற்கொண்டனர். வியாழக்கிழமையுடன் பிரசாரம் முடிவுறவுள்ள நிலையில், மக்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவு திரட்டினர்.

குறிப்புச் சொற்கள்