தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவின் 10% வரியால் சிங்கப்பூருக்குத் திருப்தி இல்லை

3 mins read
dd2b86d5-7a7f-45ea-a8b9-1b7ae6932a60
சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டின் முற்பாதியில் எதிர்பார்த்ததைவிடச் சிறந்த நிலையில் உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கு அமெரிக்கா விதித்துள்ள 10 விழுக்காட்டு அடிப்படை வரியால் பெரிய நிம்மதி கிடைத்துவிடாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.

காரணம், அமெரிக்கா அடிப்படை வரியை உயர்த்துமா என்பதும் எப்போது உயர்த்தும் என்பதும் எவருக்கும் தெரியாது என்றார் அவர். மருந்தாக்க நிறுவனங்கள், பகுதி மின்கடத்திகள் போன்ற குறிப்பிட்ட சில துறைகளுக்குக் கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கக்கூடும்.

உலகில் மேலும் அதிகமான வணிகத் தடைகள் வரக்கூடும். அவற்றால் சிங்கப்பூரைப் போன்ற சிறிய, தடையற்ற வர்த்தக நடவடிக்கைகளைக் கொண்ட பொருளியல்கள் சிரமத்தை உணரக்கூடும் என்று திரு வோங் கூறினார்.

இதன் காரணமாகவே துணைப் பிரதமர் கான் கிம் யோங் தலைமையிலான ‘சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழு’ அமைக்கப்பட்டதை அவர் சுட்டினார். அந்தப் பணிக்குழு நாட்டின் பொருளியல் உத்திகளுக்குப் புத்துயிரூட்டி மறுஆய்வு செய்யும் வழிகளை ஆராய்ந்து வருகிறது.

சிங்கப்பூர் எவ்வாறு போட்டித்தன்மையுடன் திகழமுடியும், எதிர்காலத்திற்குத் தேவையான நிலையான எரிசக்தியைப் பசுமை வழிகளின் மூலம் எவ்வாறு பெறமுடியும், புதிய சந்தைகளில் நிறுவனங்கள் நுழைந்து வெளிநாடுகளில் கிளைபரப்பி உலகின் முன்னணி இடங்களைப் பிடிக்க நாடு எவ்வாறு உதவமுடியும் என்பன போன்ற பல அம்சங்களில் பணிக்குழு கவனம் செலுத்துகிறது.

வெளிப்புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் தற்காலிகமானவை அல்ல என்றார் திரு வோங். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பூசல் தொடரும் என்றே தெரிகிறது. அதனால் உலகப் பொருளியல் மேலும் அதிகப் போட்டித்தன்மையோடு இருக்கும் என்றும் பிளவுபடும் என்றும் திரு வோங் கூறினார்.

அதனால் நாடு முன்செல்லக்கூடிய பாதை முன்பைப் போன்று எளிதாக இருக்காது. சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் நியாயமான வகையில் போட்டியிட முடிந்தது. அமெரிக்கத் தலைமையிலான விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கு அதற்கு உதவியாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

பல நாடுகள் அவற்றின் சொந்த நலன்களில் அக்கறை செலுத்துகின்றன. ஒன்றுசேர்ந்து முன்னேறுவதைக் காட்டிலும் குறுகியகால உடனடிப் பலன்களில் அவற்றின் கவனம் திரும்பியுள்ளது. மிகவும் வேறுபட்ட உலகில் சிங்கப்பூரின் எதிர்காலத்தை உறுதிசெய்யப் புதிய பொருளியல் நகல் திட்டம் தேவைப்படுகிறது.

புத்தாக்கத்திலும் தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தப்போவதாகத் திரு வோங் தெரிவித்தார்.

இவற்றின் மூலமே உற்பத்தித்திறனை உயர்த்தி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியும் என்றார் அவர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளில் அதிக முதலீடு செய்திருப்பதைப் பிரதமர் சுட்டினார். உயிர்மருத்துவ அறிவியல் துறையில் முன்பு செய்த முதலீடு கொவிட் பெருந்தொற்றின்போது கைகொடுத்தது.

மற்றத் தொழில்நுட்பங்களிலும் நீண்டகால அணுகுமுறையையே பின்பற்றுவதாகத் திரு வோங் சொன்னார். குவான்டம் கணினியலை அவர் உதாரணமாகச் சுட்டினார். தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதில் அது மிகவும் புதிய வழி. பல தொழில்துறைகளை மாற்றியமைக்கும் திறன் அதற்கு உண்டு என்றார் திரு வோங். சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு நிலையங்களிலும் அதற்கான ஆற்றல்களை வளர்க்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒட்டுமொத்தப் பொருளியலிலும் பிரதிபலிக்க வேண்டும்.

எது செய்தாலும் சிங்கப்பூரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவையும் புதிய தொழில்நுட்பத்தையும் ஏற்கும்போது தொழிற்சங்கத்தினருடனும் ஊழியர்களுடனும் அரசாங்கம் அணுக்கமாகப் பணியாற்றும் என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்