தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமேசான் ஆட்குறைப்பு; சிங்கப்பூரிலும் பாதிப்பு

2 mins read
ae07b12f-fed0-4a28-aa0e-4a4176d663fa
-

அமேசான் நிறுவனம் தன்தொலைதூர இணையச் சேவைத் துறையில் ஊழியர்களைக் குறைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆட்குறைப்பு நடவடிக்கையில் 9,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் செயல்படும் அமேசான் நிறுவன ஊழியர்களும் ஆட்குறைப்புக்கு ஆளாகக் கூடிய நிலை இருக்கிறது.

ஊழியர்களைக் குறைப்பது பற்றி அமேசான் நிறுவனம் மார்ச் மாதம் அறிவித்தது. அந்த நிறுவனம் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இடையில் 18,000 வேலைகளைக் குறைத்துவிட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் மாத ஆட்குறைப்பு அறிவிப்பு இடம்பெற்றது.

இது பற்றி அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்டி ஜாசி, மார்ச் மாதம் 20ஆம் தேதி அறிவித்தார்.

புதிய சுற்று ஆட்குறைப்பு அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்றும் பெரும்பாலும் அமேசான் வெப் சர்வீசஸ் என்ற தொலைதூரக் கணினித்துறையில் ஆட்குறைப்பு அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மனிதவளம், விளம்பரம், விளையாட்டுப் பிரிவுகளிலும் ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் அமேசான் நிறுவனத்தில், 2021 அக்டோபர் நிலவரப்படி, சுமார் 2,000 முழுநேர, பகுதிநேர ஊழியர்கள் வேலை பார்த்தார்கள். அவர்களில் எத்தனை பேர் இதுவரையில் ஆட்குறைப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே, ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல் அறிக்கையை தான் பார்த்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று கூறியது. அமேசான் வெப் சர்வீசஸ் பிரிவில் ஆட்குறைப்புக்கு ஆளானவர்களுக்கு அது பற்றிய கடிதம் அனுப்பும் நடைமுறை தொடங்கி இருப்பதாக அந்தப் பிரிவின் தலைமை நிர்வாகி ஆடம் செலிப்ஸ்கி கூறினார்.