செந்தோசாவில் புதிய சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் ஜூலை 23ல் திறக்கப்படுகிறது.
மூன்று மாதப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு பொதுமக்களை வரவேற்கக் காட்சியகம் தயாராக உள்ளது.
பழைய காட்சியகத்தைவிட புதிய காட்சியகம் மும்மடங்கு பெரிது.
அதில் 22 பிரிவுகள் இடம்பெறும் என்று ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா திங்கட்கிழமை (மே 26) தெரிவித்தது. கடலின் பல்வேறு பகுதிகளைக் காட்சியகத்துக்குச் செல்பவர்கள் கண்டு மகிழலாம்.
ஜெல்லிமீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கக்கூடிய சிறப்புத் தொட்டியைக் காட்சியகத்தின் அம்சங்களில் ஒன்றான ‘ஓஷன் வாண்டர்ஸ்’ கொண்டிருக்கும்.
சதுப்புநில நிலப்பரப்புகளையும் உள்ளூர் உயிரினங்களை மையமாகக் கொண்ட இருவழித் தொடர்பு வாழ்விடத்தை சிங்கப்பூர்ஸ் கோஸ்ட் (Singapore’s Coast) அம்சம் காட்டும்.
ஆழ்கடல் பிரிவில் ரீவ் மான்டா ரேஸ், ஸீப்ரா சுறாமீன்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் பார்க்கலாம். இப்பிரிவில் 35 மீட்டர் அகலமுள்ள பார்வையாளர் கண்ணாடிக்கு முன் நின்று ஆழ்கடல் பகுதியில் நீந்தும் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் காணலாம்.
கடல்துறை தொடர்பான ஆராய்ச்சியை விரிவுபடுத்த தலைசிறந்த கல்விக் கழகங்களுடன் காட்சியகம் இணைந்து செயல்படுவதாக ரிசோட்ஸ் வோர்ல்ட் செந்தோசா கூறியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடனான ஐந்தாண்டு கூட்டு ஆராய்ச்சியும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் புவி கண்காணிப்புப் பிரிவுடனான ஈராண்டு கூட்டு ஆராய்ச்சியும் இதில் அடங்கும்.
காட்சியகத்துக்கு அருகில் ஆய்வு, கற்றல் நிலையம் ஒன்று அமைக்கப்படுகிறது.
அதில் கற்றல் ஆய்வுக்கூடங்கள், கூட்டுப் பணி இடங்கள், கருத்தரங்கு அறைகள் போன்றவை உள்ளன.
முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்குத் தேவையான வசதிகளை சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் வழங்குவதாக ரிசோட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டான் ஹீ டெக் கூறினார்.