கூகல், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சு உத்தரவு

2 mins read
செய்திச் சேவைகளில் அரசாங்க ஆள்மாறாட்டத்தைத் தடுக்க வேண்டும்
abe07ec6-7458-447f-9982-d22a6c28d9e0
கூகல், ஆப்பிள் நிறுவனங்கள் இந்த உத்தரவுகளைப் பின்பற்ற நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆள்மாறாட்ட மோசடிகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகளைப் போல் போலியாகக் காட்டும் பெயர்களைத் தங்கள் குறுஞ்செய்தி சேவைகளில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு தொழில்நுட்ப ஜாம்பவான்களான ஆப்பிள் மற்றும் கூகல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நவம்பர் 30ஆம் தேதிக்குள், ஆப்பிள் மற்றும் கூகல் நிறுவனங்கள் ‘ஐமெசேஜ்’ மற்றும் ‘கூகல் மெசேஜ்’களில் உள்ள கணக்குகள் மற்றும் குழு உரையாடல்கள், ‘gov.sg’ அனுப்புநர் அடையாளம் அல்லது பிற உள்ளூர் அரசாங்க நிறுவனங்களை ஏமாற்றும் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

அத்துடன், அத்தகைய அனுப்புநர்களிடமிருந்து வரும் செய்திகளைக் கண்காணிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) அன்று தெரிவித்துள்ளது.

மேலும், தெரியாத அனுப்புநர்களின் சுயவிவரப் பெயர்கள் காட்டப்படக்கூடாது அல்லது அவர்களின் தொலைபேசி எண்களைக் காட்டிலும் குறைந்த முக்கியத்துவத்துடன் காட்ட வேண்டும்.

இது பயனர்கள் தெரியாத நபர்களை நன்கு அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க வகை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் சட்டபூர்வமான அரசாங்கச் செய்திகளை எளிதாக அடையாளம் காண உதவுவதற்காக, உள்ளூர் அதிகாரிகள் ஜூலை 2024 முதல் ‘gov.sg’ அனுப்புநர் அடையாளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், iMessage மற்றும் Google Messages வழியாக அனுப்பப்படும் செய்திகளுக்கு இது பொருந்தாது. இதன் விளைவாக, ‘gov.sg’ அடையாளத்தைப் பயன்படுத்தி அறியப்படாத அனுப்புநர்களிடமிருந்து வரும் செய்திகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படலாம். இந்தச் சேவைகளை வழக்கமான தகவல்களிலிருந்து எளிதில் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்று அமைச்சு ஓர் அறிக்கையில் விளக்கியது.

சிங்போஸ்ட்டைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் 120க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உட்பட, பதிவுசெய்யப்பட்ட பிற அனுப்புநர் அடையாளத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடப்பதை காவல்துறை கண்டறிந்துள்ளதால், இரண்டு செய்திச் சேவைகளும் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“ஆப்பிள் மற்றும் கூகல் நிறுவனங்கள் அமலாக்க உத்தரவுகளுக்கு இணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளன,” என்று அமைச்சு கூறியது. இந்த உத்தரவு நவம்பர் 24 அன்று இணைய குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் (OCHA) கீழ் பிறப்பிக்கப்பட்டது என்றும் அது மேலும் கூறியது.

இந்தச் சட்டம் பிப்ரவரி 2024ல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் சிங்கப்பூர் பயனர்கள் இணையத் தளங்களில் குற்றச் செயல்களுக்கு ஆளாகுவதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உத்தரவுகளையும் வழிமுறைகளையும் பிறப்பிக்க அனுமதித்தது.

“அண்மைய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்ய, பொதுமக்கள் தங்கள் தொழில்நுட்பச் சாதனங்களில் iMessage மற்றும் Google Messages செயலிகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று உள்துறை அமைச்சு வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்