வெளிநாட்டுத் தலையீட்டை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்: பிரித்தம் சிங்

3 mins read
457262db-ae17-47ff-88ec-6ce4498c54f1
“மேலும் ஒரு சிறந்த சிங்கப்பூரை உருவாக்கவே அரசியலில் நுழைந்தேன்.” - பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங்.  - படம்: சையத் இப்ராஹிம் சுல்தான் 

சிங்கப்பூரின் அரசியலில் எந்தவொரு வெளிநாட்டு கூறுகளின் தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம் என்று கூறினார் பாட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங்.

“இனங்களுக்கிடையே சமநிலை காணும் சிங்கப்பூரில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். இங்கு நாம் நமது இனம், நிறத்தால் அல்ல, நமது செயல்கள், மனிதநேயத்தால் மதிப்பிடப்படுகிறோம்,” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அடையாள அரசியல் மற்றும் வெளிநாட்டு தலையீட்டை உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை (ஏப்ரல் 26) அழைப்பு விடுத்ததற்கு திரு சிங் மேடையில் பதிலளித்தார்.

“மேலும் ஒரு சிறந்த சிங்கப்பூரை உருவாக்கவே அரசியலில் நுழைந்தேன்,” என்றார் அவர்.

தெமாசெக் தொடக்கக் கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளிக் கட்சியின் இரண்டாவது பிரசார கூட்டத்தின் கடைசி பேச்சாளராக திரு சிங் அவ்வாறு கூறினார்.

இந்த பிரசாரக் கூட்டத்தில் பாட்டாளிக் கட்சியின் 26 புதுமுகங்கள் மேடையேறினார்கள். வியாழக்கிழமை (ஏப்ரல் 26) நடந்த முதல் பிரசாரக் கூட்டத்தில் 14 வேட்பாளர்கள் இருந்தனர்.

கூட்டத்தில் பொங்கோல், தெம்பனிஸ், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிகளிலிருந்தும் தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதியிலிருந்தும் வேட்பாளர்கள் உரையாற்றினர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் பற்றி சுட்டிக்காட்டினார் பிரசாரத்தின் முதல் பேச்சாளரான பொங்கோல் குழுத்தொகுதியின் வேட்பாளர் சித்தி ஆலியா அப்துல், 43.

உயர்ந்து வரும் செலவுகளால் அதிக குழந்தைகளைப் பெறுவது பற்றி பெற்றோரை இருமுறை சிந்திக்க வைக்கிறது என்றார்.

வீவக வீடுகளின் விலைகள், ஜிஎஸ்டி நீக்கம் போன்ற கொள்கைகளை முன்வைத்தார் அலியா.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த பெரிஸ் வி பரமேஸ்வரி, முன்னாள் கைதிகள் மீண்டும் சமுதாயத்தில் சேர்வது, மனநல ஆரோக்கியத்துக்குக் கூடுதல் ஆதரவு போன்ற மாற்றங்கள் சிங்கப்பூரில் தேவை என்றார்.

“மாற்றத்தை நீங்கள் விரும்பினால், மாற்றமாக இருங்கள், மாற்றத்தை ஏற்படுத்துங்கள்,” என்று கூட்டத்திடம் திடமாக கூறினார்.

பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம், மூத்தோருக்கான மூன்று திட்டங்களை முன்வைத்தார்.

முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ஏற்கனவே ‘மெடிஷீல்டு லைஃப்’ போன்ற பிற உதவித் திட்டங்களால் ஈடுகட்டப்படாத மருத்துவச் செலவுகளுக்கு தங்கள் மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கான தற்போதைய மெடிசேவ் செலவு வரம்புகள் நீக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சட்டபூர்வ ஓய்வுக்கால வயது வரம்பை நீக்க வேண்டும் என்பது அவர் அடுத்த கோரிக்கை.

மேலும் வயதான பெற்றோரைப் பராமரிப்பவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய குடும்பப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படவேண்டும் என்றும் அவர் முன்னிறுத்தினார்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பியவர்கள் மூத்தவர்கள் என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்டுமாறு அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

“பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நோக்கத்துடன் நமது மூத்தோர் வாழ இன்னும் நிறைய செய்ய வேண்டும்,” என்றார் திருவாட்டி லிம்.

தேர்தலில் பாட்டாளிக் கட்சி சார்பில் தெம்பனிஸ் குழுத்தொகுதியை வழிநடத்தும் ஃபைசல் மனாப் அல்ஜுனிட் குழுத் தொகுதியின்கீழ் தான் சேவையாற்றிய தனது முன்னாள் காக்கி புக்கிட் குடியிருப்பாளர்களுக்குக் கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

“மலாய்-முஸ்லிம் சமூகத்தில் ஒருவரான நான் இனம், மொழி, சமயம் பாராது எல்லா தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்றுவேன்,” என்று உறுதியளித்தார்.

பாட்டாளிக் கட்சியின் இரண்டாவது பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தெம்பனிஸ் தொகுதியிலிருந்து மட்டுமில்லாமல் சிங்கப்பூரின் பல தொகுதிகளிலிருந்தும் வந்தனர்.

அவ்வாறு வந்தவர்களில் கலாராணி, 59, தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் பொதுவாகத் தமக்குப் மிகவும் பிடிக்கும் என்று தமிழ் முரசுடன் பகிர்ந்தார்.

“அவர்கள் பொதுவாகப் பேசும் கருத்துகளைக் கேட்க நான் ஆவலாக இருப்பேன். என் தலைமுறை முடிந்து இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு முன்வைக்கப்படும் திட்டங்களைப் பற்றி அறிவது அவசியம்,” என்று பகிர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்