சிங்கப்பூர் எங்கள் வீடு: வெளிநாட்டு இந்தியர்களின் தேசிய தின அனுபவம்

சிங்கப்பூர் எங்கள் வீடு: வெளிநாட்டு இந்தியர்களின் தேசிய தின அனுபவம்

3 mins read
aeb8a0a3-5318-4c40-9564-c883d756ea53
வாணவேடிக்கையைக் காண்பதற்காகக் குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் சேர்ந்து காத்திருந்தார் அரவிந்தன். - படம்: அகல்யா மணியம்
Google News Preferred Icon

தேசிய தின அணிவகுப்பு 2026 நிறைவடைந்த பின்னரும், காலாங் பகுதியில் தேசிய தினக் கொண்டாட்டத்தின் உற்சாகம் தொடர்ந்தது. 

தேசிய விளையாட்டரங்கில் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெற்ற அணிவகுப்பை நேரில் கண்ட மக்களுடன், வாணவேடிக்கைகளைக் காண காலாங் நீர்விளையாட்டு நிலையத்தைச் சுற்றிலும் பலரும் திரண்டிருந்தனர்.

அங்குக் கூடியிருந்தவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த இந்தியர்கள் பலரும் இருந்தனர். 

தேசிய தினம் குறித்த அவர்களின் அனுபவங்களையும் சிங்கப்பூரில் வாழ்வது குறித்த அவர்களின் கருத்துகளையும் தமிழ் முரசு கேட்டறிந்தது. 

“நான் 2018ஆம் ஆண்டு பணி நிமித்தமாக இங்கு வந்தேன். சிங்கப்பூர் எனக்குத் தனிமனிதனாகச் சிந்தித்து, வளருவதற்கான நல்வாய்ப்போடு, என் குடும்பம் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான சிறந்த சூழலையும் வழங்கியுள்ளது,” என்று கூறினார் மென்பொருள் பொறியாளர் அரவிந்தன், 35.

திரு வெள்ளசாமி முத்தழகு தம் மனைவியுடன் முதன்முறையாக வாணவேடிக்கையைக் காண காலாங்கிற்கு வந்திருந்தார்.
திரு வெள்ளசாமி முத்தழகு தம் மனைவியுடன் முதன்முறையாக வாணவேடிக்கையைக் காண காலாங்கிற்கு வந்திருந்தார். - படம்: கிறிஸ்டோ லியோன்

“சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும், பல இனங்களையும் பண்பாடுகளையும் கொண்ட பெரிய நாடாகத் திகழ்கிறது. இங்கு அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்காகச் செயல்படுவதைக் கண்டு நானும் வியந்தேன். இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும் என்னை ஒதுக்காமல் அனைவரும் வரவேற்றார்கள்,” என்று கூறினார் 34 வயது வெள்ளசாமி முத்தழகு.

திரு வெள்ளசாமி இவ்வாண்டு தம் மனைவியுடன் காலாங்கில் வாணவேடிக்கையைக் காண வந்திருந்தார்.

வாணவேடிக்கையைக் காண தம் நண்பர்களுடன் காலாங்கிற்கு வந்திருந்தார் திரு ஐயப்பன்.
வாணவேடிக்கையைக் காண தம் நண்பர்களுடன் காலாங்கிற்கு வந்திருந்தார் திரு ஐயப்பன். - படம்: கிறிஸ்டோ லியோன்

“சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் மட்டுமன்றி, இங்குள்ள மக்களின் மனங்களும் தூய்மையானவை. என்னைப் போன்ற வெளிநாட்டினருக்குச் சிங்கப்பூர் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அதன்மூலம் என் குடும்பத்தினருக்கு என்னால் உதவ முடிவது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று திரு ஐயப்பன் கூறினார். 55 வயதான அவர் ‘ஷாப்பி’யில் பணியாற்றி வருகிறார்.

சிங்கப்பூரில் அவர் கொண்டாடும் முதல் தேசிய தினம் இதுவாகும். தேசிய தினக் கொண்டாட்டங்களைக் காணும் வகையில், தம் நண்பர்களுடன் காலாங் பகுதியில் ஒன்றுகூட அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

2009ஆம் ஆண்டிலிருந்து  சிங்கப்பூரில் பணியாற்றும் கண்ணுப்பிள்ளை சுகு, அவரின் மனைவி காஞ்சனா.
2009ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் பணியாற்றும் கண்ணுப்பிள்ளை சுகு, அவரின் மனைவி காஞ்சனா. - படம்: விஷ்ருதா நந்தகுமார்

“நான் சிங்கப்பூரில் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். ஆனால், இந்தியாவில் இருந்து என் மனைவியை அழைத்து வந்து, அவருடன் சேர்ந்து இங்கு வாணவேடிக்கையைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை,” என்று கூறினார் கண்ணுப்பிள்ளை சுகு, 52.

தாம் பார்த்த சிங்கப்பூரை மனைவியும் பார்க்க வேண்டும் என்று நினைத்த அவருக்கு, இப்போது தம் மனைவியும் தேசிய தினக் கொண்டாட்டத்தையும் பார்த்தது சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தந்தது.

தன் நண்பருடன், நெதர்லாந்திலிருந்து சிங்கப்பூருக்குப் படிக்க வந்த சத்விதா (இடது).
தன் நண்பருடன், நெதர்லாந்திலிருந்து சிங்கப்பூருக்குப் படிக்க வந்த சத்விதா (இடது). - படம்: விஷ்ருதா நந்தகுமார்

மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ஒரு வாரத்திற்கு முன்புதான் நெதர்லாந்திலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் 19 வயது சத்விதா.

ஆறு மாதங்களுக்கு நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலவிருக்கும் சத்விதா, தம் நண்பர்களுடன் இணைந்து தேசிய தினக் கொண்டாட்டங்களைக் காண வந்திருந்தார்.

சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரம் தம்மைப் பெரிதும் கவர்ந்ததாக அவர் கூறினார். “இத்தனை தமிழர்கள் மற்ற இனத்தவரோடு இணைந்து ஒற்றுமையாக தேசிய தினத்தைக் கொண்டாடுவதைப் பார்க்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது,” என்றார் அவர்.

தம் குடும்பத்துடன் வாணவேடிக்கைகளைக் காண தஞ்சோங் ரூ பூங்காவிற்கு வந்திருந்த திருவாட்டி விஜயகௌரி உதயகுமரன்.
தம் குடும்பத்துடன் வாணவேடிக்கைகளைக் காண தஞ்சோங் ரூ பூங்காவிற்கு வந்திருந்த திருவாட்டி விஜயகௌரி உதயகுமரன். - படம்: சிவாய சுப்பிரமணியம்

கனடாவிலிருந்து விடுமுறைக்காக இரண்டு நாள்களுக்கு முன்பு சிங்கப்பூர் வந்த திருவாட்டி விஜயகௌரி உதயகுமரனுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில், தேசிய தின அணிவகுப்பு வாணவேடிக்கைகளைக் காண அவரைத் தஞ்சோங் ரூ பூங்காவிற்கு அவரது குடும்பத்தார் அழைத்துச் சென்றனர்.

“சிங்கப்பூர் போன்ற சிறந்ததொரு நாட்டின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. விடுமுறை அனுபவத்தை இந்த வாய்ப்பு மேலும் சிறப்பாக்கியது,” என்றார் அவர்.

குடும்பத்தினருடன் வெளிநாட்டு ஊழியர் நயாப்.
குடும்பத்தினருடன் வெளிநாட்டு ஊழியர் நயாப். - படம்: இளவரசி ஸ்டீஃபன்

தேசிய தின அணிவகுப்பைப் பார்வையிடத் தம் மகள்களுடன், விளையாட்டரங்கிற்கு வந்திருந்த வெளிநாட்டு ஊழியர் திரு நயாப், “என் தாய்நாட்டில் தேசிய தினக் கொண்டாட்டத்தைக் காணத் தலைநகருக்குச் செல்லவேண்டும் . ஆனால், இங்கு ஒரு குடையின்கீழ் மக்கள் திரண்டிருப்பதைக் காண்கையில் மகிழ்ச்சி. இந்த நாட்டின் கதையில் எங்களுக்கும் ஓர் அங்கம் உண்டு என்பதை நினைப்பது ஊக்கத்தைத் தருகிறது,” என்றார் .

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களின் அனுபவங்கள், இந்த நாட்டை வேலைவாய்ப்புக்காக வந்த இடமாக மட்டுமல்லாமல், பலருக்கும் அவர்களின் வீடாகவும் கருதவைத்துள்ளன. 

தேசிய தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், அவர்களின் கதைகள்  சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை மேலும் எடுத்துக்கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
தேசிய தினம் 2026வெளிநாட்டு ஊழியர்NDP 2026