ஏமாறுவோரின் வங்கிக் கணக்கை புதிய மோசடித் தடுப்பு மசோதா கட்டுப்படுத்தும்

ஏமாறுவோரின் வங்கிக் கணக்கை புதிய மோசடித் தடுப்பு மசோதா கட்டுப்படுத்தும்

2 mins read
1c15b8d2-5f4a-4be0-aee6-a49e7b1597c9
பிடிவாதமாக மோசடியில் சிக்குவோரின் வங்கிக் கணக்குகள் இனி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மோசடி பற்றி விழிப்பூட்டியபோதிலும் பிடிவாதமாகச் செயல்பட்டு பணத்தை இழந்தோர், இறுதியாக அரசாங்கத்திடம் உதவி கேட்கின்றனர்.

அதுபோன்றவர்களைப் பாதுகாக்க, மோசடியிலிருந்து பாதுகாக்கும் மசோதா சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) நிறைவேறியது.

வங்கிகள், காவல்துறையினர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என பலரும் அளிக்கும் அறிவுரைகளைக் கேட்காமல் மோசடியில் சிக்குவோரின் வங்கிக் கணக்குகளைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்குகிறது இந்த மசோதா.

மோசடிக்காரர்களுக்கு அவர்கள் பணம் அனுப்புவதை இதன் மூலம் தடுக்க இயலும்.

மேலும், இது தொடர்பாக வங்கிகளுக்குக் கட்டுப்பாட்டு ஆணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்படும்.

அந்த ஆணைகளின் அடிப்படையின் தனிப்பட்டோரின் வங்கிக் கணக்குப் பரிவர்த்தனைகளை வங்கிகள் கட்டுப்படுத்தும்.

பணம் அனுப்புதல், ஏடிஎம் வசதிகள் மற்றும் கடன்பற்று தொடர்பான எல்லா வசதிகளின் பயன்பாடு போன்றவற்றையும் பேநவ் நேரடிப் பணப் பரிவர்த்தனை பரிமாற்றம் மற்றும் வங்கி முகப்புப் பரிவர்த்தனைகளைப் பாதிக்கும் செயல்களையும் வங்கிகளால் கட்டுப்படுத்த இயலும்.

முன்னதாக, வெளிநாட்டு மோசடிக் கும்பல்களின் இணையம் வாயிலான மோசடிகளைச் சமாளிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் மசோதா வரையப்பட்டது.

அழைப்புகள், சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் சேவைகள் வாயிலாக பணமோசடியில் சிக்க வைக்கும் கும்பல்களை அந்த மசோதா குறி வைத்தது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முதல்முறை அந்தச் சட்டம் பரிந்துரைக்கப்பட்டபோது, உள்துறை அமைச்சு ஒரு விளக்கத்தை அளித்தது.

தவறிழைக்கும் புதுப்பிப்புக் குத்தகையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்றோர் நேரில் தொடர்புகொண்டு ஏமாற்றுவதைப் போன்ற வழக்கமான மோசடிகளை புதிய மசோதா உட்படுத்தாது என்று அப்போது அது தெரிவித்து இருந்தது.

ஆயினும், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங், அத்தகைய மோசடிகளையும் புதிய மசோதா கையாளும் என்று அறிவித்தார். இரு மாத காலத்தில் நிலைமை மாற்றம் கண்டிருப்பதை அவர் விளக்கினார்.

மோசடிக் குற்றங்களில் உடந்தையானவர்களை நேரில் சந்திக்கும்போதும் மோசடிக்கு பலர் ஆளாகும் சம்பவங்கள் நிகழ்ந்ததைக் காவல்துறை கண்டறிந்த பின்னர் அந்த மாற்றம் நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்