சிங்கப்பூர்க் கடப்பிதழுக்குப் பெருமதிப்பிருப்பதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார். பலரின் பார்வையில் சிங்கப்பூர் ஒரு நம்பகமான நாடு என்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
சிங்கப்பூர்க் கடப்பிதழ் மிகவும் சக்திவாய்ந்தது என்று ஏராளமானோர் கூறுகின்றனர். சிங்கப்பூரர்கள் பல நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் இருப்பதாக உலக ஆய்வொன்று குறிப்பிட்டதைத் திரு வோங் சுட்டினார்.
60 ஆண்டுகளாக நீடித்த நாட்டு நிர்மாணத்தில் அனைத்துலக அளவில் சிங்கப்பூருக்குக் கிடைத்திருக்கும் இடம் நமது முக்கிய சாதனை என்றார் அவர்.
அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நல்லாட்சி, மற்றொன்று கடினமாக உழைக்கும் ஒன்றுபட்ட மக்கள் என்று தமது சீன உரையில் திரு வோங் குறிப்பிட்டார்.
“நாடு நிலையாக இருந்தால்தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும், இளையர்களுக்கு நம்பிக்கை இருக்கும் என்று மூத்த சிங்கப்பூரர்கள் பலர் கருதுகின்றனர். சிங்கப்பூரின் வளப்பமும் நிலைத்தன்மையும் தானாக வந்துவிடவில்லை என்பதும் முன்னரே தீர்மானிக்கப்படவில்லை என்பதும் அவர்களுக்குத் தெரியும். காலனித்துவத்திலிருந்து சுதந்திர நாடாகும் வரை பல தலைமுறைச் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து சிறந்த எதிர்காலத்திற்காகப் பாடுபட்டுள்ளனர்,” என்று பிரதமர் வோங் சுட்டினார்.

