சிங்கப்பூரில் உள்ள நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்களுக்குப் போப் பிரான்சிஸின் மறைவு பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது.
கத்தோலிக்கர்களுக்கு மட்டுமின்றிப் பிற சமயங்களைச் சேர்ந்தோரிடத்திலும் போப் பிரான்சிஸ் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது அவருக்காகக் குவிந்த இரங்கல் செய்திகள்மூலம் புலப்பட்டது.
போப் பிரான்சிஸின் மறைவு பேரதிர்ச்சி என்றார் கிறிஸ்டினாள் செல்வம், 61. “அவர் உடல்நலம் சீராகி மீண்டுவருவதற்கு நாங்கள் வேண்டாத நாளில்லை,” என்று துக்கத்துடன் கிறிஸ்டினாள் பகிர்ந்துகொண்டார்.
ஈஸ்டர் ஞாயிற்றை இன்பமாகக் கொண்டாடிய போப் பிரான்சிஸ் இப்படி அடுத்த நாளே உலகைத் துயரத்தில் ஆழ்த்துவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றார் செயின்ட் பெர்னடெட் தேவாலயத்தில் கத்தோலிக்கப் பாடங்களைக் கற்பித்துவரும் கிறிஸ்டினாள்.
சமய நல்லிணக்க அமைப்பின் (Inter-Religious Organisation) இளையர் பிரிவுத் தலைமை ஒருங்கிணைப்பாளரான 28 வயது ஷுக்குல் ராஜ் குமாருக்கு சென்ற ஆண்டு செப்டம்பரில் போப் பிரான்சிஸைக் காண வாய்ப்புக் கிடைத்தது.
“போப் பிரான்சிஸைப் பற்றி அறிந்துகொண்டதிலிருந்து அவரை நான் அதிகம் ரசித்திருக்கிறேன். அவர் உயிரிழந்த செய்தி பெரும் மனவலியைத் தந்துள்ளது. அவர் போதித்த அறநெறிகளைக் கடைப்பிடிப்பது மூலம் அவர் விட்டுச்சென்ற மரபைத் தொடரலாம்,” என்றார் ஷுக்குல்.
“போப் பிரான்சிஸ் அனைத்து சமயங்களையும் அரவணைக்கும் போக்கு கொண்டவராக இருந்தார்,” என்றார் இந்து ஆலோசனை மன்றத் தலைவர் க செங்குட்டுவன், 64.
‘ஹேஷ்.பீஸ்’ (Hash.Peace) எனும் சமய நல்லிணக்க அமைப்பின் நிறுவனரும் ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ (Hope Initiative Alliance) அமைப்பின் மேம்பாட்டு, சமூக உறவுகள் இயக்குநருமான நஸ்ஹத் ஃபஹீமா, “2019ல் அவர் சகோதரத்துவத்துக்கான ஆவணத்தில் கையெழுத்திட்டது முஸ்லிம் சமூகத்துக்கும் வத்திகனுக்கும் இடையே உறவை வலுப்படுத்தியது. தொடர்ந்து முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தார். முஸ்லிம், கிறிஸ்துவ அகதி முகாம்களுக்குச் சென்று பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்தார். ஈராக்குக்குச் சென்ற முதல் போப் அவர்தான்,” என்றார்.
2022ல் வத்திகனுக்கு மகனுடன் சென்ற ஷாஜி ஃபிலிப்பிற்கு அங்கு போப் பிரான்சிஸைக் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு கிடைத்த வாய்ப்பை வரப்பிரசாதமாக அவர் கருதுகிறார்.
“நான் கத்தோலிக்கர் இல்லை என்றபோதும் போப் பிரான்சிஸின் குரலைக் கேட்டு, அவருடன் பிரார்த்தனையில் ஈடுபடுவது அரிய அனுபவமாக இருந்தது,” என்றார் ‘மர் தோமா’ தேவாலய உறுப்பினர் ஷாஜி.
சென்ற ஆண்டு போப் பிரான்சிஸ் சிங்கப்பூர் வந்திருந்தபோது மாயா நடனக் குழுவின் சிறப்புத் தேவையுள்ள நடனமணிகள் அவர் முன்னிலையில் தங்கள் திறனை அரங்கேற்றினர்.
“அப்போது அவர் எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருடைய அன்பு எங்களை மிகவும் கவர்ந்தது,” என்றார் மாயா நடன அரங்கின் இணை நிறுவனர் கவிதா கிருஷ்ணன்.