தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீ‌‌‌ஷான் - தோ பாயோ, பொத்தோங் பாசிர் தொகுதிகளில் களமிறங்கவுள்ள சிங்கப்பூர் மக்கள் கட்சி

2 mins read
c077b0d3-96e9-4f67-a88a-5cba29fd2fc3
சிங்கப்பூர் மக்கள் கட்சி தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா (இடமிருந்து இரண்டாவது), தலைவர் மெல்வின் சியு (வலமிருந்து இரண்டாவது) செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (மார்ச் 29) பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் மக்கள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பீ‌‌‌ஷான் - தோ பாயோ குழுத்தொகுதியிலும் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியிலும் களமிறங்கவிருக்கிறது.

தோ பாயோ லோரோங் 4ல் (மார்ச் 29) மக்களைச் சந்திக்க சென்றபோது கட்சி அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டது.

எந்த உறுப்பினர்கள் எந்தத் தொகுதியில் களமிறங்கப்படுவார்கள் என்பது முடிவுசெய்யப்பட்டுவிட்டதாகக் கட்சி தலைமைச் செயலாளர் ஸ்டீவ்‌ சியா தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது அது அறிவிக்கப்படும் என்றார் அவர்.

பீ‌‌‌ஷான் - தோ பாயோவிலும் பொத்தோங் பாசிரிலும் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டதை அடுத்து கட்சி இந்த ஆண்டும் அங்குப் போட்டியிடவிருப்பதாகத் திரு சியா தெரிவித்தார்.

அந்த இரண்டு தொகுதிகளிலும் மக்களின் மனத்தையும் அதன்வழி நாடாளுமன்றத்தில் ஓர் இடத்தையும் வெல்ல நம்பிக்கைக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

இனிவரும் வாரங்களில் சிங்கப்பூர் மக்கள் கட்சி அதிகளவில் தொகுதி உலாக்கள் நடத்தி மக்களைச் சந்திக்கவிருக்கிறது. கட்சியின் கொள்கைகளையும் நாடாளுமன்றத்தில் கட்சி எழுப்ப விரும்பும் விவகாரங்களையும் உறுப்பினர்கள் மக்களிடம் எடுத்துக்கூறவிருக்கின்றனர்.

கட்சித் தலைவர் மெல்வின் சியூ, பொருளாளர் வில்லியம்சன் லீ உள்ளிட்டோர் சனிக்கிழமை காலை(மார்ச் 29) தோ பாயோவின் பல வட்டாரங்களுக்குச் சென்று கடைக்காரர்களிடமும் மக்களிடமும் பேசினர்.

சிங்கப்பூர் மக்கள் கட்சி தோ பாயோ விஸ்தா சந்தையில் மக்களைச் சந்தித்தது.
சிங்கப்பூர் மக்கள் கட்சி தோ பாயோ விஸ்தா சந்தையில் மக்களைச் சந்தித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

1994ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சிங்கப்பூர் மக்கள் கட்சி கடந்த மூன்று தேர்தல்களில் பீ‌‌‌ஷான் - தோ பாயோ குழுத்தொகுதியில் போட்டியிட்டது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திரு சியா, திரு சியூ, திரு லீ, திரு ஒஸ்மான் சுலைமான் ஆகியோர் 32.77 விழுக்காட்டு வாக்குகளை வென்றனர்.

மக்கள் செயல் கட்சியின் டாக்டர் இங் எங் ஹென், சீ ஹொங் டாட், சொங் கீ ஹியோங், சக்தியாண்டி சுப்பாட் ஆகியோர் அடங்கிய அணி 67.23 விழுக்காட்டு வாக்குகள் வென்று ‌‌‌பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதியைக் கைப்பற்றியது.

பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைவராக அப்போது பொறுப்பு வகித்த ஹோசே ரெய்மண்ட் 39.33 விழுக்காட்டு வாக்குகள் பெற்றார். தனித்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சீத்தோ யி பின் 60.67 விழுக்காட்டு வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார்.

குறிப்புச் சொற்கள்