சிங்கப்பூரில் பெட்ரோல் விலைகள் சரிவு

ஈரான் போரினால் ஏற்றங்கண்ட எண்ணெய் விலையில் மாற்றம்

சிங்கப்பூரில் பெட்ரோல் விலைகள் சரிவு

2 mins read
aaf86270-00b5-4369-b188-00035b6607c5
மத்திய கிழக்கு மோதலில் இருந்து மாறிவரும் அறிகுறிகளுக்கு எண்ணெய்ச் சந்தைகள் எதிர்வினையாற்றியதால், கடந்த இரண்டு நாள்களாக எரிபொருள் கட்டணங்கள் சரிந்துள்ளன. - படம்: சாவ்பாவ்

மூன்று வாரங்களாகத் தொடர்ந்து சிங்கப்பூரில் உயர்ந்துவந்த பெட்ரோல் விலைகள் குறையத் தொடங்கியுள்ளன. மத்திய கிழக்கு மோதலில் இருந்து மாறிவரும் அறிகுறிகளுக்கு எண்ணெய்ச் சந்தைகள் எதிர்வினையாற்றியதால், கடந்த இரண்டு நாள்களாக எரிபொருள் கட்டணங்கள் சரிந்துள்ளன.

ஈரான் போரினால் தூண்டப்பட்ட தொடர்ச்சியான விலை உயர்வைத் தொடர்ந்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு, முக்கிய உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட இடையூறுகள், விநியோக எதிர்பார்ப்புகளைக் குறைத்து, கச்சா எண்ணெய் விலைகளை உயரச் செய்தன.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக அதிகரித்துவந்த பெட்ரோல் விலைகள், புதன்கிழமை (மார்ச் 25) குறைக்கப்பட்டபோது, ​​முதல் நிவாரண அறிகுறி தென்பட்டது. ஷெல் நிறுவனம் தனது 95 மற்றும் 98 ஆக்டேன் பெட்ரோல் மற்றும் பிரீமியம் வி-பவர் ரகத்தின் விலைகளை ஐந்து காசு குறைத்தது. அதே நேரம், முந்திய நாள் ஏற்பட்ட கடுமையான உயர்வுக்குப் பிறகு டீசல் விலைகள் மாற்றமின்றி இருந்தன.

இந்த விலைக் குறைப்புகள் மார்ச் 26 வரையிலும் நீடித்தன. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக விலைச் சரிவைக் குறித்தது.

விலைக் குறைப்பு

எஸ்ஸோ நிறுவனம் தனது பெட்ரோல் ரகங்கள் அனைத்திலும் ஐந்து காசு விலைக் குறைப்பைச் செய்து முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனம், தனது 95 மற்றும் 98 ஆக்டேன் எரிபொருளுக்கான விலைக் குறைப்பிற்கு இணையாக விலைக் குறைப்பைச் செய்ததுடன், தனது பிரீமியம் எக்ஸ்-பவர் ரகத்தின் விலையை இன்னும் அதிகமாக, அதாவது 18 காசு குறைத்தது.

அன்றைய தினம் பிற்பகுதியில் கால்டெக்ஸ் நிறுவனமும் பெட்ரோலுக்கான இதேபோன்ற விலைக் குறைப்புகளைச் செய்தது. இருப்பினும் அது டீசல் விலையை 20 காசு உயர்த்தியது.

எஸ்பிசியும் தனது பெட்ரோல் விலையை ஐந்து காசு குறைத்துள்ளது. மார்ச் 26 மாலை நிலவரப்படி, 95-ஆக்டேன் எரிபொருளின் விலை லிட்டருக்கு $3.41 ஆக இருந்தது.

அண்மைத் திருத்தங்களைத் தொடர்ந்து, மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வகையான 95-ஆக்டேன் பெட்ரோலின் விலை, மார்ச் 26 அன்று முக்கிய பெட்ரோல் நிறுவனங்களில் லிட்டருக்கு $3.42 முதல் $3.46 வரை இருந்தது.

சிங்கப்பூரில் பெட்ரோல் விலைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் அவை பெரும்பாலும் அனைத்துலக எண்ணெய் விலை அளவுகோல்கள் மற்றும் பிற செலவுக் காரணிகளின் அடிப்படையில் சில்லறை விற்பனையாளர்களால் தினசரி சரிசெய்யப்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் விளைவாக, புவிசார் அரசியல் அதிர்ச்சிகளுக்கு ஏற்ப உள்ளூர் பெட்ரோல் விலைகள் விரைவாக மாறுகின்றன.

குறிப்புச் சொற்கள்