தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையும் ஃபிஜியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி பிள்ளைகள் இதய மருத்துவமனையும் வெள்ளிக்கிழமை (மே 9) இணக்கக் குறிப்பு ஒன்றைச் செய்துகொண்டன.
ஃபிஜி பிள்ளைகள் இதய மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய அறுவைச் சிகிச்சைகளில் சிங்கப்பூர் மருத்துவர்கள் உதவ அந்த இணக்கக் குறிப்பு வழிவகுக்கிறது.
குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்கான உதவியை வழங்குவது மட்டுமின்றி சிங்கப்பூர் மருத்துவர்கள் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி பிள்ளைகள் இதய மருத்துவமனையின் கற்றலுக்கும் நிபுணத்துவ பயிற்சிக்கும் கைகொடுப்பர்.
“இதுபோன்ற பணிகள் உள்ளூர் மருத்துவர்களுடனும் தாதிகளுடனும் எங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ள வழியமைப்பதோடு நீண்டகால கற்பித்தலுக்கும் நிபுணத்துவ ஆதரவுக்கும் உதவுகிறது,” என்றது தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை.
ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி பிள்ளைகள் இதய மருத்துவமனை மருத்துவ ஊழியர்களும் குறுகிய கால பயிற்சிகளுக்குத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வருவர்.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி, பேராசிரியர் ஐமரிக் லிம், “இத்தகைய பங்காளித்துவம் அனைத்துலக சுகாதாரத்துக்குத் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பங்களிக்க எடுக்கப்படும் முயற்சியை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
தேசியப் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சுகாதார முயற்சிகள் பங்ளாதேஷ், கம்போடியா, இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் என பல நாடுகளில் விரிவடைந்திருக்கிறது என்றும் பேராசிரியர் லிம் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 14 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு, மூன்றாவது முறையாக சிங்கப்பூரிலிருந்து ஃபிஜிக்குப் பயணம் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வோர் ஆண்டும் ஃபிஜியிலும் பசிபிக் தீவுகளிலும் 2,700க்கும் அதிகமான பிள்ளைகள் இதயக் கோளாற்றுடன் பிறக்கின்றன. அந்த வட்டாரத்தில் குழந்தை மருத்துவ இதயம் தொடர்பான சேவைகள் இல்லை.