சிங்கப்பூர் பொக்கிமோன் நிலையம் (Pokemon Center Singapore), புதுப்பிப்புப் பணிகளுக்காக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. முற்றிலும், உள்ளூர் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அது மாற்றி அமைக்கப்படவுள்ளது.
ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள பொக்கிமோன் விற்பனை நிலையம் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்து, இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் மீண்டும் திறக்கப்படும் என பொக்கிமோன் சிங்கப்பூர் நிறுவனம் திங்கட்கிழமையன்று (மார்ச் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மேலும், சிங்கப்பூரின் மரபுடைமையால் ஈர்க்கப்பட்ட கலைப்படைப்புகளும் உள்ளூர் கலாசாரத்தை வெளிப்படுத்தும் உட்புற வடிவமைப்புகளும் அதில் இடம்பெறவுள்ளன.
சிங்கப்பூரின் தனித்துவமான அழகை வெளிப்படுத்தும் வகையில் ஒரு புதிய பொக்கிமோன் நிலையம் மீண்டும் திறக்கப்படும்போது அறிமுகப்படுத்தப்படும்.
நிலையம் தற்காலிமாக மூடப்பட்டிருக்கும் வேளையில், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பொக்கிமோன் பொம்மைகளையும் அட்டைகளையும் மூன்று மாதக் காலத்திற்கு இரு வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாகச் செயல்படவுள்ள இரு விற்பனை நிலையங்களில் வாங்கலாம்.
ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியும் பிளாசா சிங்கப்பூரில் ஏப்ரல் 6ஆம் தேதியும் தற்காலிக விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

