சிங்கப்பூர் பூல்ஸ் தொடர்பான அனைத்து வகை மின்னிலக்கப் பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை அந்நிறுவனம் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) முதல் இந்த அணுகுமுறை நடப்புக்கு வருகிறது.
இதற்கு முன்னதாக பேநவ் பரிவர்த்தனைகளுக்கு சிங்கப்பூர் பூல்ஸ் 10 காசு கட்டணம் வசூலித்தது.
புதிய அணுகுமுறை தனது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சௌகரியத்தைக் கொடுக்கும் என்று அது தெரிவித்துள்ளது.
பந்தயம் கட்டுவது, பரிசுகளைப் பெறுவது உட்பட ஒவ்வொரு பேநவ் பரிவர்த்தனைக்கும் 10 காசு வசூலிக்கப்பட்டதாக சிங்கப்பூர் பூல்சின் இணையப்பக்கம் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், இத்தகைய அணுகுமுறைக்கு அனுமதி இல்லை என்று துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவருமான கான் கிம் யோங் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
பேநவ், ஃபாஸ்ட், நெட்ஸ் உட்பட மற்ற மின்னிலக்கப் பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக சிங்கப்பூர் பூல்ஸ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) தெரிவித்தது.
இநெட்ஸ் பரிவர்த்தனைக் கட்டணங்களுக்கான செலவுகளையும் ஏற்றுக்கொள்வது தொடர்பாகப் பங்காளித்துவ அமைப்புகளுடன் செயல்பட்டு வருவதாக அது கூறியது.

