44.66 மில்லியன் கப்பல் கொள்கலன்களைக் கையாண்ட சிங்கப்பூர் துறைமுகம்

2 mins read
a671e9a9-076c-4e2c-bf7a-5221368aeb8c
சிங்கப்பூர் துறைமுகம் 2025ஆம் ஆண்டில் 44.66 மில்லியன் கப்பல் கொள்கலன்களை அல்லது இருபது அடி நீளமான கொள்கலன்களைக் கையாண்டு, புதிய சாதனை படைத்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் துறைமுகம் 2025ஆம் ஆண்டில் 44.66 மில்லியன் கப்பல் கொள்கலன்களை அல்லது இருபது அடி நீளமான கொள்கலன்களைக் கையாண்டுள்ளது. இது ஒரு புதிய சாதனை அளவு. இது முந்தைய ஆண்டின் அளவான 41.12 மில்லியன் கப்பல் கொள்கலன்களை விட அதிகம்.

இது 2024ஆம் ஆண்டிலிருந்து கையாளப்படும் கொள்கலன் எண்ணிக்கையில் 8.6 விழுக்காடு அதிகரிப்பாகும். இது கடல்சார் துறையின் கொள்கலன் போக்குவரத்திற்கான நிலையான அளவீடு என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) அன்று தெரிவித்தது.

கப்பல் வருகையும் புதிய உச்சத்தை எட்டியது. வருடாந்தர கப்பல் வருகை 3.22 பில்லியன் மொத்த டன்னாக உயர்ந்தது. இது ஓராண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட 3.11 பில்லியன் மொத்த டன்னிலிருந்து 3.5 விழுக்காடு அதிகமாகும்.

மொத்த டன் எடை என்பது ஓராண்டில் அனைத்து கப்பல்களின் ஒருங்கிணைந்த உள் அளவை, அதாவது அவற்றின் இயந்திர அறை, சரக்கு அல்லாத இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அளவைக் குறிக்கிறது. இது ஒரு துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தை அளவிடும் ஒரு பொதுவான கடல்சார் தொழில்துறை அளவீடு ஆகும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் குடியரசின் ‘தேர்வுத் துறைமுகமாக நீடித்த பங்கை’ அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் உலகளாவிய கடல்சார், வர்த்தக மையமாக அதன் நிலைப்பாட்டைக் காட்டுகின்றன என்று உள்ளூர் ஹோட்டலில் நடைபெற்ற சிங்கப்பூர் கடல்துறை அறக்கட்டளையின் புத்தாண்டு உரையாடல்கள் எனும் நிகழ்ச்சியில் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்தார்.

பல அம்சங்களில் சாதனை உச்சத்தை எட்டியிருந்தாலும், சிங்கப்பூர் துறைமுகத்தால் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 1.4 விழுக்காடு குறைந்தது. 2024ல் 622.67 மில்லியன் டன்னிலிருந்து 2025ல் 614.34 மில்லியன் டன்னாக அது குறைந்தது.

2025ஆம் ஆண்டில், கப்பல்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருளைக் குறிக்கும் மொத்த எண்ணெய் விற்பனை 56.77 மில்லியன் டன் என்ற புதிய உச்சத்தை எட்டியது. மாற்று எரிபொருள்கள் வலுவான வேகத்தைப் பதிவு செய்தன.

இத்தகைய எரிபொருள்களின் விற்பனை 2024ல் 1.35 மில்லியன் டன்னிலிருந்து 2025ல் 1.95 மில்லியன் டன்னாக உயர்ந்தது. இந்த உயர்வுக்குப் பெரும்பாலும் உயிரி எரிபொருள் கலவைகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

2025ல் 1.38 மில்லியன் டன் உயிரி எரிபொருள் கலவைகள் விற்கப்பட்டன. இது முந்தைய ஆண்டின் 0.88 மில்லியன் டன்னைக் காட்டிலும் அதிகமாகும் என்று எம்பிஏ கூறியது.

குறிப்புச் சொற்கள்