சிங்கப்பூரின் வெப்பம் கடுமையானால் 300க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட நிலையங்கள் தீவெங்கும் திறக்கப்படும்.
அளவுக்கு அதிகமான வெப்பத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தின்கீழ் நிலையங்கள் செயல்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சில் உள்ள எரிசக்தி, பருவநிலைக் கொள்கைப் பிரிவின் இயக்குநர் கெல்வின் சோங் கூறியுள்ளார்.
சமூக மன்றங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பாளர்க் குழு நிலையங்கள், ஒருசில உள்ளரங்கு விளையாட்டு அரங்கங்கள் ஆகியவை குளிரூட்டப்பட்ட நிலையங்களாகச் செயல்படும். அங்கு மக்கள் அமரக்கூடிய வசதிகள் செய்துதரப்படும்.
‘மைஇஎன்வி’ என்ற தேசிய வானிலை செயலி மூலம் அதிகரிக்கவிருக்கும் வெப்பம் குறித்து குறைந்தது நான்கு நாள்களுக்கு முன்னர் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படும் என்று சோங் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒரு குளிரூட்டப்பட்ட நிலையம் நிரம்பிவிட்டால், மூத்தோர் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார் அவர்.
கடுமையான வெப்பத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் ஆயத்தமாகிவரும் நிலையில் இம்மாதம் 18ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், லியன்ஹ சாவ்பாவ் ஆகியவற்றுடன் நடைபெற்ற நேர்காணலின்போது சோங் பேசினார்.
வறட்சியான தென் மேற்கு வெப்பமண்டலப் பருவநிலை ஒருபுறம். எல் நினோ பருவநிலை மறுபுறம் என சிங்கப்பூர் தற்போது இரட்டிப்பான வெப்பநிலையை அனுபவிக்கிறது என்ற சோங், சிங்கப்பூர் அதிக வெப்பத்துடன் வறட்சியையும் எதிர்கொள்ளும் என்றார்.
தேசியச் சுற்றுப்புற அமைப்பின் வெப்பத்தைக் கண்காணிக்கும் ஒன்பது நிலையங்களின் தரவுகள்படி இவ்வாண்டு 17 நாள்கள் அதிக வெப்பம் பதிவானது. கடந்த இதே காலகட்டத்தில் ஐந்து நாள்களில் மட்டும் அதிக வெப்பம் பதிவானது.
அன்றாடம் பதிவாகும் வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாள்களுக்குச் சராசரியாக 35 டிகிரி செல்சியசாகப் பதிவானால் சிங்கப்பூரில் கடுமையான வெப்பநிலை அறிவிக்கப்படும்.
எல் நினோ பருவநிலை ‘கோட்சில்லா’ நிகழ்வைப் போல உருமாறிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரில் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம்வரை உச்சகட்ட வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு எச்சரித்தது.
“அதை அணுக்கமாகக் கவனிக்கிறோம். வெப்பம் அதிகபட்ச நிலையை எட்டினால் வெப்பக் காலத் திட்டங்களை அமல்படுத்த தயாராக இருக்கிறோம்,” என்று சோங் சொன்னார்.
சிங்கப்பூர் கடைசியாக 2016ஆம் ஆண்டில் உச்சகட்ட வெப்பநிலையைக் கண்டது. ஆக வலுவான எல் நினோ பருவநிலையின் முடிவில் அது ஏற்பட்டது.
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரின் கடும் வெப்பத்தை எதிர்கொள்வதற்கான முதல் தேசிய அளவிலான திட்டத்தை நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சு அறிவித்தது.


