உலகத் தலைவர்களில் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் பிரதமர் முதலிடம்

உலகத் தலைவர்களில் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் பிரதமர் முதலிடம்

படம்: த ஸ்டார்

15 Sep 2024 - 5:06 pm

2 mins read

புத்ராஜெயா: உலகத் தலைவராக வலம் வரும்போது கணிசமான அளவு பொறுப்புகளும் கூடவே வருகிறது.

ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது நல்ல சம்பளத்தையும் நமக்கு ஈட்டித் தருகிறது.

உலகத் தலைவர்களின் ஆண்டு வருமானம் குறித்த தகவல்களை தாங்கி வரும் ‘பொலிட்டிக்கல் சேலரிஸ்.காம்,ஃபோர்ப்ஸ்’ இணையத்தகவலின்படி, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட $1.69 மில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்படுகிறது. இது உலகத் தலைவர்களிடையே திரு வோங் அதிக சம்பளம் வாங்குபவர் எனக் காட்டுகிறது.

இரண்டாவது நிலையில், மிகவும் பின்னால் சுவிட்சர்லாந்து அதிபர் வியோலா அம்ஹெர்ட் என்பவரின் ஆண்டு வருமானம் அமெரிக்க டாலர் 570,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், உலகில் பெரிய அளவில் வருமானம் ஈட்டும் தலைவர்கள் பலரும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ளனர் என்றும் அந்த இணையத்தகவல் கூறுகிறது.

அந்தத் தகவல் அறிக்கையின்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்க டாலர் 400,000 பெறுகிறார். இது ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் அமெரிக்க டாலர் 413,351ஐ விடக் குறைவு. எனினும், ஆஸ்திரியப் பிரதமர் கார்ல் நெஹம்மர் பெறும் அமெரிக்க டாலர் 317,077ஐ விட அதிகம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல், நியூசிலாந்துப் பிரதமர் (US$311,971), கனடியப் பிரதமர் (US301,475) ஆகியோர் வாங்கும் சம்பளத்தைவிட அமெரிக்க அதிபரின் சம்பளம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின் எட்டாவது நிலையில் ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் அமெரிக்க டாலர் 293,722 பெறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் வாங்கும் சம்பளம் அந்நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடப்படும்போது, கென்யா அதிபர் வில்லியன் ருட்டோ முதலிடம் வகிக்கிறார் என்று கூறப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டின் தகவல்களின்படி, இவருடைய ஆண்டு வருமானம் அமெரிக்க டாலர் 136,000 ஆக உள்ளது. இது அந்நாட்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 2360% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்