தனியார் குடியிருப்புச் சொத்துகளுக்கான விலை நெருக்கடிகள் தணிந்துள்ளன.
அதிக எண்ணிக்கையில் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும் என்பதால் தனியார் வீடுகளின் வாடகை தொடர்ந்து இறக்கம் காணும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் நவம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை கூறியது.
இவ்வாண்டு ஏப்ரலில் சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட பிறகு வீட்டு விலைகள் மிதமாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின.
கடந்த இரு காலாண்டுகளாகத் தொடர்ச்சியாக சொத்து விலையேற்றம் மிதமாக இருந்தது. இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் 11.4 விழுக்காடாக இருந்த அது, மூன்றாம் காலாண்டுக்குள் 4.4 விழுக்காடு இறங்கியதாக ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
விலையேற்றம் மிதமாக இருந்தபோதும் நகர்ப்பகுதிகளிலும் எஞ்சிய மத்தியப் பகுதிகளிலும் மத்தியப் பகுதிக்கு வெளியிலும் அது நேர்மறை அளவிலேயே இருந்தது. இருப்பினும், முக்கிய மத்தியப் பகுதியில் சொத்து விலை ஆண்டு அடிப்படையில் 2020ஆம் ஆண்டின் இறுதிக்குப் பிறகு முதன்முறையாக இறக்கம் கண்டது. அது இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 1.3 விழுக்காடு சரிந்தது.
இதற்கிடையே, பரிவர்த்தனை நடவடிக்கை மெதுவடைந்து நிலையாக இருப்பதாகவும், அது இப்போது கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முந்திய நிலையை எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.