தனியார் வீட்டு விற்பனை குறைந்தது; விலை உயர்வும் மெதுவடைந்தது

தனியார் வீட்டு விற்பனை குறைந்தது; விலை உயர்வும் மெதுவடைந்தது

2 mins read
ff4e7fa7-2bd9-41a8-b74e-9d8c5f5a48f5
தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக தனியார் வீட்டு விற்பனை குறைவாகப் பதிவாகியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விலைகள் இவ்வாண்டின் முதல் காலாண்டில் வெறும் 0.3% மட்டுமே உயர்ந்தன.

இது தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக வளர்ச்சி மந்தமடைந்துள்ளதைக் காட்டுகிறது. 

கடந்த நான்கு ஆண்டுகளாக ஏறுமுகமாக இருந்த தனியார் வீட்டு விற்பனை சரிவைச் சந்தித்துள்ளதால் குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளே விற்கப்பட்டுள்ளன.

நகர மறுசீரமைப்பு ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 1) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆணையம் வழங்கியுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த தனியார் வீட்டு விலைகளில் ஏற்பட்ட 0.3 விழுக்காடு உயர்வு, காலாண்டு அடிப்படையில் கடந்த ஆறு காலாண்டுகளில் பதிவான ஆகக் குறைவான உயர்வாகும். 

இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 0.6 விழுக்காடு உயர்வும், மூன்றாவது காலாண்டில் 0.9 விழுக்காடு உயர்வும், இரண்டாவது காலாண்டில் 1 விழுக்காடு உயர்வும் பதிவாயின.

மேலும், 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஏற்பட்ட 3.4 விழுக்காடு உயர்வுக்கு மாறாக , நிலம் சார்ந்த சொத்துகளின் விலைகள் 1.8 விழுக்காடு சரிந்தன. 

அதேவேளையில், முந்தைய காலாண்டில் ஏற்பட்ட 0.2 விழுக்காடு சரிவிலிருந்து மீண்டு , நிலம் அல்லாத சொத்துகளின் விலைகள் 1 விழுக்காடு உயர்ந்தன என்றும் தரவுகள் குறிப்பிட்டன.

குறைவான அளவில் விற்பனைக்கு வந்த புதிய வீடுகள், சீனப் புத்தாண்டு விடுமுறை ஆகியவற்றின் காரணமாக மொத்த விற்பனையளவு காலாண்டு அடிப்படையில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு சரிந்து 4,041 குடியிருப்புகளாகக் குறைந்துள்ளன.

ஒப்புநோக்க, 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்த எண்ணிக்கை 6,699ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்