பைனியர் தனித்தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) புதுமுக வேட்பாளராக, சட்டத்துறைப் பட்டதாரியும் இரு பிள்ளைகளின் முழுநேரப் பராமரிப்பாளருமான புதுமுகம் ஸ்டெஃபனி டான், 47, தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையில் பட்டம் பெற்ற அவர், 2011ல் வழக்கறிஞராகப் பணியாற்ற அதிகாரபூர்வமாகத் தகுதிபெற்றார்.
சட்ட அமைச்சின் சட்டக் கொள்கைப் பிரிவில் துணை இயக்குநராகவும் தற்காப்பு அமைச்சுக்கு சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ள அவர், 2016ல் வேலைப் பயணத்தை நிறுத்தி, தன் இரு பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை முழுநேரமாக ஏற்றார்.
அவர் 2023ஆம் ஆண்டு ‘பிஎஸ்பி’யில் தொண்டூழியராகச் சேர்ந்தார். “தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் நாடாளுமன்றப் பணிகளுக்கு உதவ விரும்பினேன். 2023 முதல் சிங்கப்பூரின் மேற்குப் பகுதிகளில் கட்சியின் தொகுதி உலாக்களில் மக்களைச் சந்தித்துள்ளேன்,” என்றார் ஸ்டெஃபனி. ‘பிஎஸ்பி’யின் ‘த பாம்’ (The Palm) இதழின் இணை ஆசிரியராகவும் அவர் சேவையாற்றிவருகிறார்.
“மனநலப் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுக்க விரும்புகிறேன். குறிப்பாக, தாமாகவே விரும்பி முழுநேரப் பராமரிப்பாளர்களாகச் செயல்படுவோருக்கு எப்படி மேலும் ஆதரவு அளிக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன். நிதியாதரவு, ஓய்வுக்காலம் போன்றவற்றுக்கு அப்பாலும் அவர்களுக்கு உதவி தேவை.
“நம் பிள்ளைகளைச் சுதந்திரமாக, ஆரோக்கியமாக வளர ஊக்குவிக்கும் கல்விக் கட்டமைப்பையும் குடிமக்களுக்குப் பதில்சொல்லும் அரசாங்கத்தையும் ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்றார் ஸ்டெஃபனி.
அவர் மக்கள் செயல் கட்சியின் பேட்ரிக் டேயைத் தேர்தலில் சந்திப்பார்.