சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சுவா சூ காங் குழுத் தொகுதி வேட்பாளர்கள் பிரிக்லாண்டில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தனர்.
அத்தொகுதியில் அக்கட்சி போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுடன் கட்சியின் தொண்டர்களும் சேர்ந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 24) காலை மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தனர்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியினர் பல குழுக்களாகப் பிரிந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். வெண்டி லோ, அபாஸ் கஸ்மானி, நல்லகருப்பன், லாரன்ஸ் பெக் ஆகியோர் தலைமையிலான குழு ஆறு புளோக்குகளில் பிரசாரம் செய்தது. இதே குழு, ஏப்ரல் 24 மாலை கத்தோலிக்க ஹை பள்ளியில் நடக்கும் பிரசாரக் கூட்டத்திற்கும் தயாராகி வருகிறது.
திரு அபாஸ், 71, மக்களை நேரடியாகச் சந்திக்க ஆவலாக இருப்பதாக வியாழன் காலை தெரிவித்தார்.
“கடந்த முறை கொள்ளைநோய் காலத்தில் மக்களை நேரடியாகச் சந்திக்க முடியவில்லை. தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து பேச மட்டுமே முடிந்தது,” என்று குறிப்பிட்டார் பயிற்சி ஆலோசகரும் 2020 பொதுத் தேர்தலில் திருவாட்டி லோவுடன் தஞ்சோங் பகார் குழுத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான திரு அபாஸ்.