சிங்கப்பூர் அடுத்த ஆண்டு (2027) ஆசியான் கூட்டமைப்புக்கான தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து தென்கிழக்காசிய வட்டாரத்தில் கூடுதலான நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்த உதவுவதற்குச் சிங்கப்பூர் முன்னுரிமை வழங்கும். வட்டார அளவில் அரசாங்கங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் சிங்கப்பூர் இந்த இலக்கைக் கொண்டுள்ளது.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் புதன்கிழமை (ஜூன் 17) ஆசியப் பொருளியல் உச்சநிலைச் சந்திப்பில் பேசிய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, குறு மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு, தற்போது ஆசியானுக்குத் தலைமைத்துவப் பொறுப்பு வகிக்கும் பிலிப்பீன்ஸ் எடுக்கும் முயற்சிகளை சிங்கப்பூர் மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்றார்.
“அடுத்த ஆண்டு சிங்கப்பூர் ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை சிங்கப்பூர் ஏற்கும்,” என்ற திருமதி டியோ, “செயற்கை நுண்ணறிவை மேம்பட்ட முறையில்மேலும் நன்கு பயன்படுத்தும் நோக்கில் கூடுதலான சிறிய, நடுத்தர நிறுவனங்கள், ஊழியர்கள், அரசாங்கங்கள் ஆகிய தரப்பினரை ஒன்றிணைப்போம்,” என்று குறிப்பிட்டார்.
பொறுப்பான தகவல் தரவுப் பயன்பாடு
தகவல் தரவுகளைப் பொறுப்பாகப் பயன்படுத்த வகைசெய்யும் சட்டங்களின் முக்கியத்துவத்தையும் திருமதி டியோ சுட்டினார். அதுவே செயற்கை நுண்ணறிவின் உயிர்நாடி என்று அவர் வருணித்தார்.
நம்பகமான செயற்கை நுண்ணறிவுத் தளங்களை உருவாக்க நிறுவனங்களுக்குத் தரமான தகவல் தரவுகள் கிடைப்பதும் தகவல் தரவுகளை எல்லை தாண்டிப் பகிர வகைசெய்யும் சூழலும் அவசியம் என்றும் அவர் விளக்கினார்.
குறிப்பாக, தங்களின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை நன்கு அறிந்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கும், பல்வேறு நாடுகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு அது பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
அவரவரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் தேசியப் பாதுப்புக்காகவும் கட்டுப்பாடுகள் தேவை என்றாலும் அளவுக்கதிகமான கட்டுப்பாடுகள் இருந்தால் அவை புத்தாக்கத்துக்கு இடையூறு விளைவிக்கக்கூடும் என்றும் சிறிய நிறுவனங்கள் தங்களை விரிவுபடுத்திக்கொள்வதை அது சிரமமாக்கக்கூடும் என்றும் திருமதி டியோ எச்சரித்தார்.

