சிங்கப்பூரின் குடியிருப்புகளுக்கான வாடகைச் சந்தை புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது.
புதிதாக எழுந்துள்ள சவால்களும் நம்பிக்கை நிறைந்த வாய்ப்புகளும் வாடகைக்கு விடப்படும் போக்கில் இவ்வாண்டு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளன.
எனவே, நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல்தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அடுத்துவரும் ஆண்டுகளில் வீட்டு விநியோகம் அதிகரிக்க உள்ளது. அதுவே, வாடகைச் சந்தையில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
‘குறைந்தபட்சக் குடியிருப்புக் காலம்’ (MOP) என்னும் நிபந்தனையை ஏராளமான வீடுகள் பூர்த்திசெய்ய உள்ளன. 2025ஆம் ஆண்டு 6,973ஆக இருந்த அத்தகைய வீடுகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 13,484ஆக அதிகரிக்க உள்ளன.
தொடர்ந்து, அடுத்த ஆண்டில் அத்தயை வீடுகளின் எண்ணிக்கை 18,939ஆகவும் 2028ஆம் ஆண்டு 21,393ஆகவும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
data.gov.sg எனும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சொத்துத் தகவல் தளத்திலிருந்து அந்தத் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
ஆக, 2026 முதல் 2028 வரையிலான மூன்றாண்டுகளில் 53,816 வீடுகளுக்கான குறைந்தபட்சக் குடியிருப்புக் கால நிபந்தனை தளர்வதால் அதிகமான வீடுகள் வாடகைக்கு விடப்படும் நிலை உள்ளது. இதற்கு முந்தைய மூன்றாண்டு காலமான 2023 முதல் 2025 வரை அந்த நிபந்தனைகளிலிருந்து வெளிவந்த வீடுகளின் எண்ணிக்கை 34,474.
தொடர்புடைய செய்திகள்
அதனால், அடுத்துவரும் மூன்றாண்டுகளில் வீடுகள் வாடகைக்கு விடப்படுவதில் உரிமையாளர்களிடையே போட்டி நிலவக்கூடும் என்று தெரிகிறது.

