அனைத்துலகப் பண நிதியத்தின் இரண்டு மானிய உதவி நிதிகளுக்குச் சிங்கப்பூர் அரசாங்கம் 34.7 மில்லியன் அமெரிக்க டாலர் (S$44.1 மில்லியன்) வழங்குகிறது.
பாதிக்கப்படக்கூடிய நாடுகள் பொருளியல் ரீதியாகச் சிக்கல்களை எதிர்நோக்கும்போது அந்த நிதி உதவியாக வழங்கப்படும்.
நிதி வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 4) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிங்கப்பூர் கொடுக்கும் நிதியில் 28.6 மில்லியன் அமெரிக்க டாலர், வறுமைக் குறைப்பு மற்றும் வளர்ச்சி அறக்கட்டளைக்குச் செல்லும்.
அதேபோல் 6.1 மில்லியன் அமெரிக்க டாலர், சிறப்பு வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்குச் செல்லும். இந்த நிதி, கடுமையான நிதிச் சிக்கலில் உள்ள எழை நாடுகளுக்குக் கொடுக்கப்படும். இது தற்போது சூடானுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் தீர்மானத்தை வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் சார்பாகத் திரு டான் அதைச் செய்தார்.
“நம் நாடு வழங்கும் நிதி நியாயமானது என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று துணை அமைச்சர் டான் கூறினார்.
அனைத்துலகப் பண நிதியத்துக்குக் கொடுக்கப்படும் நிதி, சிங்கப்பூரின் முந்தைய சேமிப்பிலிருந்து வழங்கவில்லை என்றும் இந்த நிதியால் சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் உதவிகளில் தாக்கம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“நாடாளுமன்றத்தில் நாம் பலமுறை கூறியதுபோல, நம்முடைய வளங்கள் எல்லையற்றவை அல்ல. சுகாதாரப் பராமரிப்பு, மூத்தோருக்கான உதவிகள், சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு போன்ற உள்நாட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிறகே வெளிநாடுகளுக்கு உதவுகிறோம்,” என்றார் திரு டான்.
இந்த உதவி நிதித் தீர்மானத்தை ஆதரித்து ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். திரு சக்தியாண்டி சுப்பாட், திரு ஜேமஸ் லிம், திரு இங் ஷி சுவான், திரு லீ ஹோங் சுவாங், திரு ஷான் லோ, திரு விக்டர் லாய் ஆகியோர் அவர்கள்.

