தேசியச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆய்வு, வளர்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த $1 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்படும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மாலை (ஜனவரி 24) நடைபெற்ற ‘சிங்கப்பூர் ஏஐ ஆய்வு வார இரவு விருந்து’ நிகழ்ச்சியில் திருமதி டியோ, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
சிங்கப்பூர் மற்றும் உலக நலனுக்காக ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இலக்கு கொண்டுள்ள நாட்டின் கனவு மெய்ப்பட அரசாங்கம் கொண்டுள்ள திட்டம் குறித்து உரையாற்றினார்.
அவ்வகையில் இத்திட்டத்தின் அங்கமாகப் பொது ஆய்வுகளை மேற்கொள்ள வழிவகுக்கும் வகையில் 2025 முதல் 2030 வரை, $1 பில்லியனுக்கும் அதிகமான நிதி அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இத்திட்டம் அடிப்படை ஏஐ, பயன்முறை ஏஐ, திறன் மேம்பாடு ஆகிய மூன்று இன்றியமையாப் பிரிவுகளில் கவனம் செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ‘‘வட்டார அளவில் அதிக அளவிலான தரவு மையங்களைச் சிங்கப்பூர் கொண்டுள்ளது. அவை 50 விழுக்காடு வரை வளர்வதற்குத் தேவையான இடவசதியை அனுமதித்து வருகிறோம். எனினும், 2050ம் ஆண்டிற்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்துக்கும் கரிம நீக்கத்துக்கும் இடையிலான சமநிலை (Net-zero emission) காணச் சிங்கப்பூர் கொண்டுள்ள இலக்கை அடைய, இந்த வளர்ச்சியைக் கவனமாக நிர்வகிக்க வேண்டும்,’’ என்றார் திருமதி டியோ.
செயற்கை நுண்ணறிவு தொடர்பில் நாடு கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையைப் பற்றியும் உரையில் சுட்டிய அமைச்சர், கழிவுநீரைச் சுத்திகரித்து அதனைப் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் ‘நியூவாட்டர்’’ என்று குறிப்பிடப்படும் நீராக மாற்றியது உட்பட சிங்கப்பூரின் நீர் சார்ந்த மீள்திறனைக் கட்டியெழுப்பப் பல ஆண்டுகால ஆராய்ச்சிகள் உதவியதையும் விவரித்தார்.
அவ்வகையில் இன்று, ஒருங்கிணைந்த நீர் நிர்வாகத்திற்கு ஒரு முன்மாதிரி நகரமாகவும், வளர்ந்து வரும் உலகளாவிய நீர்மையமாகவும் அனைத்துலக அரங்கில் சிங்கப்பூர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அமைச்சரின் உரையில் உலக அளவில் காணப்படும் சில இடர்களுக்கு உள்ளூர் நிறுவனங்கள் அளித்த தீர்வுகள் குறித்தத் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
‘‘உள்ளூர் நிறுவனங்களின் தீர்வுகள் சில, தற்போது பிற நாடுகளிலும் காணப்படுகின்றன. உதாரணமாக, கம்போடியா, இந்தோனீசியா, நேப்பாளம் உள்ளிட்ட நாடுகளில் அவசரகாலச் செயல்பாடுகள், மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்காக ‘வாட்டரோம்‘ உருவாக்கிய கையடக்க நீர் வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன,’’ என்றார் அவர்.
ஆற்றல்மிக்க தொழில்நுட்ப வளத்தில் செழிப்புறும் அதேவேளையில் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு எனும் பிரிவில் காணப்படும் சவால்களைச் சீர்செய்யவும் வழிகள் கண்டறியப்படும் என்று அமைச்சர் டியோ நம்பிக்கை தெரிவித்தார்.
சிங்கப்பூர் முன்னுரிமை அளித்துள்ள துறைகளில், பொது ஆய்வு நிறுவனங்களின்கீழ் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கான உன்னத நிலையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்த அமைச்சர், இந்த நிலையங்கள் அனுபவம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் ஆய்வாளர்களைக் கொண்ட குழுக்களாகச் செயல்பட்டு, இத்துறையில் நெடுங்காலமாகத் தீர்வுகாணப்படாத, கடினமான அம்சங்களில் கவனம் செலுத்தும் என்றார்.
அவ்வகையில் இந்த ஆய்வாளர்கள் உள்ளூர்ச் சூழல் உட்பட அனைத்துலக அளவில் உள்ள பிற தரப்பினருடன் இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய அமைச்சர் டியோ, புதுப்பிக்கப்பட்ட தேசிய ஏஐ ஆய்வு, வளர்ச்சித் திட்டம் இருமொழித் திறன் கொண்ட ஆய்வாளர்களைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

