தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

2 mins read
71c981d9-9bc7-4d22-9dab-f7f4e4c62d25
முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் நெதர்லாந்தும் வந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலக நாடுகளுக்கான மின்னிலக்கப் போட்டித்தன்மைத் தரவரிசையில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

முன்னதாக 2021ல் கொவிட்-19 கிருமிப்பரவலின்போது அது ஐந்தாம் இடத்தில் இருந்தது. கொள்கை வகுத்தல், பயிற்சி, ஆய்வு உள்ளிட்ட அம்சங்களில் வலுவான நிலையைக் கொண்டிருந்ததால் சிங்கப்பூர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

மின்னிலக்கத்துக்கான அணுகுமுறையின் அடிப்படையில், 64 நாடுகளைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்று அதனைத் தெரிவித்தது.

உலக மின்னிலக்கப் போட்டித்தன்மையின் ஏழாவது பதிப்பு நவம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரிலும் சுவிட்சர்லாந்திலும் தளம் கொண்டுள்ள அனைத்துலக நிர்வாக மேம்பாட்டுக் கழகத்தில் இருக்கும் ஆய்வு நிலையமான உலகப் போட்டித்தன்மை நிலையம் அந்தத் தரவரிசையை வெளியிட்டது.

ஒவ்வொரு நாட்டின் செயல்திறனும் மூன்று அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

அதில் ஒன்று, அறிவாற்றல். அதன்படி, ஒரு நாட்டின் அனைத்துலக அனுபவம், கணித, தொழில்நுட்பத் திறன்கள் மதிப்பிடப்படுகின்றன. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, முதலீடுகள், இணையக் கட்டமைப்பு கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும் நெதர்லாந்து இரண்டாமிடத்தையும் பிடித்தன.

சென்ற ஆண்டு முதல் இடத்தில் வந்த டென்மார்க் இம்முறை நான்காம் நிலைக்கு இறங்கியது.

நிறுவனங்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையிலான குத்தகைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் சிங்கப்பூர் முதல் இடம் பிடித்தது. சமூக, பொருளியல், அரசியல் விளைவுகளில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதால் இது நிறுவன அமைப்பின் வலிமைக்கான ஓர் அறிகுறி என்று உலகப் போட்டித்தன்மை நிலையத்தின் மூத்த பொருளியலாளர் டாக்டர் ஜோசெ சாபாலேரொ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்