ஊழல் குறைந்த ஆசிய பசிபிக் நாடு சிங்கப்பூர்: உலகளவில் மூன்றாமிடம்

2 mins read
4f5f0887-87c4-4e3d-9cf2-e02f29055605
14 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடத்துக்கு வந்துள்ளது. - கோப்புப் படம்: சிங்கப்பூர்

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 2024ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் குறைந்த நாடாக சிங்கப்பூர் இடம்பிடித்து உள்ளது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெருமை மீண்டும் சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ளது.

மேலும், லஞ்சம் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சிங்கப்பூர் முன்னேறியுள்ளது.

உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பின் கடந்த ஆண்டுக்கான லஞ்ச ஊழல் கண்ணோட்டக் குறியீட்டு (CPI) அறிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) வெளியிடப்பட்டது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக இருந்த நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முன்னேறி உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

உலக அளவில் 180 நாடுகளில் மூன்றாம் இடத்துக்கு சிங்கப்பூர் வந்திருப்பது, 2020ஆம் ஆண்டிலிருந்து அது அடைந்திருக்கும் ஆக உயர்ந்த தரநிலை என அறிக்கை குறிப்பிட்டது.

2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஐந்தாம் இடத்தில் இருந்தது.

கடந்த 2012ஆம் ஆண்டு, உலக அளவில் 100க்கு 87 புள்ளிகளைப் பெற்று ஆகச் சிறந்த நிலையை சிங்கப்பூர் அடைந்திருந்தது.

இம்முறை சிங்கப்பூர் 100க்கு 84 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகப் பட்டியலின் முதலிடத்தில் டென்மார்க் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நீடிக்கிறது. 100க்கு 90 தரப் புள்ளிகளை அது பெற்றுள்ளது.

அதற்கு அடுத்த நிலையில் 88 புள்ளிகளுடன் பின்லாந்து வந்துள்ளது.

சிங்கப்பூருக்கு அடுத்து, 82 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை நியூசிலாந்தும் 81 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை லக்சம்பர்க்கும் பிடித்துள்ளன.

180 நாடுகளில் பொதுத் துறையில் நிலவும் லஞ்ச ஊழல் தொடர்பாக நிபுணர்களும் வர்த்தகர்களும் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் குறியீட்டுப் புள்ளிகளை ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அளவிடுகிறது.

வலுவான, சுதந்திரமான அமைப்புகளோடு நியாயமாக தேர்தல்களை நடத்தும் நாடுகளுக்கும் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சிமுறை நிலவும் நாடுகளுக்கும் இடையிலான கூர்மையான வேறுபாடுகளை லஞ்ச ஊழல் கண்ணோட்டக் குறியீடு வெளிப்படுத்துவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்