உலகளாவியத் திறன்கள் குறியீட்டில் சிங்கப்பூர் 12வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் 30 நாடுகள் இடம்பெறுகின்றன.
திறன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் அணுகுமுறைகளுக்கு நாடுகள் எந்த அளவுக்குத் தயாராக இருக்கின்றன என்பதை இந்தக் குறியீடு அளவிடுகிறது.
திறன்களை அடிப்படையாகக் கொண்டு அணுகுமுறைகள் பயிற்சிகளில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன, ஊழியர்களின் திறன்களை அடையாளம் கண்டு வெகுமதி தருவது, திறன்கள் அடிப்படையிலான வேலை நியமனம், மேம்பாடு ஆகியவற்றில் ஒரு நாடு எவ்வாறு செயல்படுகிறது என்பதை குறியீடு மதிப்பிடுகிறது.
இந்தக் குறியீட்டைப் பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பும் பெரியோர் கற்றல் கழகமும் வெளியிட்டன.
25 திறன்கள் குறியீடுகளை மையமாகக் கொண்டு நாடுகளுக்குப் புள்ளிகள் தரப்பட்டன.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை மேம்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
திறன்களுக்கு முன்னுரிமை வழங்கும் அணுகுமுறைகளுக்கான நிலையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசினார் அமைச்சர் லீ.
தொடர்புடைய செய்திகள்
திறப்பு விழா வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடைபெற்றது. அதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திறன்களுக்கு முன்னுரிமை தரும் அணுகுமுறையை நடைமுறைப்படுத்தும் முயற்சி சிங்கப்பூரில் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் லீ தமது உரையில் தெரிவித்தார்.
வேலை நியமனம், பயிற்சி அளித்தல், வாழ்க்கைத் தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்குத் தேவையான திறன்களில் கவனம் செலுத்துவது முக்கியம் என்றார் அவர்.
“கல்வித் தகுதியை மட்டுமே நம்பியிருந்தால் ஏட்டுக் கல்வி அடையாளம் காணாத ஆற்றல்களையும் அனுபவத்தையும் அறவே அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டு விடக்கூடும். இந்தத் திறன்களை தனிநபர்கள் வேலையிடத்தில் கற்றிருக்கலாம்,” என்று அமைச்சர் லீ கூறினார்.
ஊழியர்களின் திறன்களை வர்த்தகங்கள் அடையாளம் கண்டு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
வாழ்க்கைத் தொழில் தெரிவுகளையும் பயிற்சிகளையும் ஊழியர்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தேவைப்படும் திறன்களை பயிற்றுவிப்பாளர்கள் மிகத் துல்லியமாகக் கற்பிக்க வேண்டும் என்றும் அமைச்சர் லீ தெரிவித்தார்.