புலம்பெயர்ந்தவர்களுக்கான செலவுமிக்க நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் வந்துள்ளது. குடிமக்களுக்கான பட்டியலில் சிங்கப்பூருக்குக் கிடைத்த இடம் 28. லீ குவான் யூ பொது கொள்கைக் கழகம் நடத்திய ஆய்வில் அது தெரியவந்தது.
ஆசியா, ஆஸ்திரலேசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள 45 நகரங்களில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அவற்றுள் உள்ளூர்வாசிகளின் வாழ்க்கைச் செலவினத்தைவிட புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைச் செலவினம், அனைத்துலக பணவீக்கத்தாலும் பங்குசந்தை ஏற்ற இறக்கத்தாலும் நேரடியாகப் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
வீட்டு விலைகள், போக்குவரத்துக் கட்டணங்கள், அனைத்துலகப் பள்ளிக் கட்டணங்கள் ஆகியவை புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவினங்கள்.
இவ்வாண்டு ஆய்வில் உட்படுத்தப்பட்ட 45 நகரங்களில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் வந்தது. நியூயார்க், சூரிக், லாஸ் ஏஞ்சலஸ் ஆகியவை முதல் மூன்று இடங்களில் வந்தன.
ஆசியாவில் மட்டும் புலம்பெயர்ந்தோரும் உள்ளூர்வாசிகளும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரைக் கருதுகின்றனர். இரண்டாவது இடத்தில் ஹாங்காங் வந்தது.
2021ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர்க்குச் செலவுமிக்க நகரமாகக் கருதும் நகரங்களில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2022ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அது ஐந்தாம் இடத்தில் வந்தது.