தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்வு, வளம், விருப்பம்: ஆசிய பசிபிக்கில் சிங்கப்பூருக்கு முதலிடம்

2 mins read
fd32aa62-45dd-49f3-a7a0-7406532ea1e2
ஒன்பது ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஏறத்தாழ 7,000 பேர் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வாழக்கூடிய நகரமாகவும் விரும்பக்கூடிய நகரமாகவும் சிங்கப்பூர் தேர்வுபெற்றுள்ளது.

அத்துடன், சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய நகரமாகவும் சிங்கப்பூர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

‘ஆசிய பசிபிக் சிறந்த நகரங்கள் 2025’ என்னும் புதிய ஆய்வு, ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 140 நகரங்களில் நடத்தப்பட்டது.

வாழக்கூடிய, விரும்பக்கூடிய, வளமான நகரம் என்னும் மூன்று அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த மூன்று அம்சங்களிலும் சிங்கப்பூரைத் தலைசிறந்த நகரமாக ஆய்வில் பங்கேற்றோர் தேர்ந்து எடுத்தனர்.

முதலிடத்தை சிங்கப்பூர் பிடித்திருக்கும் நிலையில், அதற்கு அடுத்த இடத்தை தோக்கியோவும் மூன்றாம் இடத்தை தென்கொரியத் தலைநகர் சோலும் பெற்றுள்ளன. மேலும், முதல் பத்து நகரங்களில் ஹாங்காங் (4வது), பேங்காக் (6வது), சிட்னி (7வது) ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, முதல் 100 நகரங்களின் பட்டியலில் ஆக அதிகமாக சீனாவைச் சேர்ந்த 33 நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில், பெய்ஜிங் (5வது), ஷாங்காய் (8வது) ஆகியன பத்து இடங்களுக்குள் வந்துள்ளன.

ஒன்பது ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஏறத்தாழ 7,000 பேர் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.

நகரங்களில் விலைவாசிக்கும் வருமானத்துக்கும் இடையிலான விகிதம் உள்ளிட்ட தகவல்களுடன், ‘டிரிப்அட்வைசர்’ (Tripadvisor) தரப்பட்டியல், ‘கூகல் டிரெண்ட்ஸ்’ (Google Trends) புள்ளிவிவரங்கள் போன்றவையும் ஆய்வில் சேர்க்கப்பட்டன.

விலைவாசிக்கும் வருமானத்துக்கும் இடையிலான விகிதம் என்பது ஒரு நகரத்தின் சராசரி வீட்டு விலைக்கும் குடும்ப வருமானத்துக்கும் இடையிலான விகிதம்.

சிங்கப்பூரின் ‘வாழத்தகுந்த நகரங்களுக்கான மையம்’ ஏற்பாடு செய்த சொற்பொழிவு நிகழ்வு ஒன்றில் புதன்கிழமை (பிப்ரவரி 12) ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

‘நகரங்களை வாழக்கூடியதாகவும் விரும்பக்கூடியதாகவும் மாற்றுவது எது’ என்னும் தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. உலக வர்த்தக ஆலோசனை நிறுவனமான ரெசோனன்ஸ் (Resonance), சந்தை ஆய்வு நிறுவனமான இப்சோஸுடன் (Ipsos) இணைந்து ஆய்வை நடத்தியது.

குறிப்புச் சொற்கள்