அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து மன்றத்துக்கு சிங்கப்பூர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற மன்றத்தின் 42வது பொதுக் கூட்டத்தில், இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
உலகளாவிய விமானப் போக்குவரத்துத் தரநிலைகளையும் நடைமுறைகளையும் மேற்பார்வையிடும் ஐக்கிய நாட்டு அமைப்பான அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து மன்றத்தின் ஆளுகைக் குழுவில் அங்கம் வகிக்கும் 36 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரும் நிதி மூத்த துணை அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ், சிங்கப்பூர் பேராளர் குழுவுக்குத் தலைமை தாங்கினார்.
திரு சியாவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘சாதனை அளவிலான வாக்குகள்’ மூலம் மன்றத்தில் சிங்கப்பூரின் இடம் உறுதியானதாகக் கூறினார். சிங்கப்பூர், 184 வாக்குகளில் 176 வாக்குகளைப் பெற்றது. மன்றத்திற்குத் தேர்வான அனைத்து நாடுகளிலும் சிங்கப்பூரே அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது.
“விதிகள் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்க, சிறிய நாடுகளுக்குத் தங்கள் செல்வாக்கைச் செலுத்துவது கடினமானதாக இருக்கும் உலகில், நமது நலன்களைப் பாதுகாக்க ஒருமித்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் நாம் கடினமாக உழைக்க வேண்டும்,” என்று திரு சியாவ் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்து மன்றம் போன்று சிறந்து விளங்கும் அனைத்துலக அமைப்புகள், சிங்கப்பூர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் செழிக்கவும் தேவையான உலகை உருவாக்குவதற்கான முக்கியத் தளங்களாக தொடர்கின்றன என்று அவர் சொன்னார்.
மன்றத்திற்கு மீண்டும் தேர்வானது சிங்கப்பூருக்குக் கிடைத்த கௌரவம் என்றும் போக்குவரத்து அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் திரு சியாவ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மன்றத்தின் வலுவான அனைத்துலகத் தலைமைத்துவமும் அதன் உறுப்பு நாடுகள் மற்றும் தொழில்துறையின் ஆதரவும், அரசாங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்காலச் சவால்களைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து நாடுகளின் நலனுக்காக, இந்த முயற்சிகளுக்குப் பங்களிக்க அனைத்துப் பங்குதாரர்களுடனும் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றச் சிங்கப்பூர் தயாராக உள்ளது என்று திரு சியாவ் கூறினார்.