ஐக்கிய நாட்டுக் கடல்சார் அமைப்பின் மன்ற உறுப்பினராகச் சிங்கப்பூர் மீண்டும் தேர்வு

ஐக்கிய நாட்டுக் கடல்சார் அமைப்பின் மன்ற உறுப்பினராகச் சிங்கப்பூர் மீண்டும் தேர்வு

2 mins read
da5f67e7-6dc3-4c60-8612-163e61298672
ஐக்கிய நாட்டு அனைத்துலக கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச் செயலாளர் அர்சினியோ டொமினிகுவெஸ் உடன் சிங்கப்பூர் போக்குவரத்து தந்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ். - படம்: போக்குவரத்து அமைச்சு
Google News Preferred Icon

ஐக்கிய நாட்டு அனைத்துலகக் கடல்சார் அமைப்பின் மன்ற உறுப்பினராக (IMO council) வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) சிங்கப்பூர் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பான கடல் போக்குவரத்துக்கும் கடல் மற்றும் வளிமண்டல மாசு தடுப்புக்கும் பொறுப்பு வகிக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த இந்தத் தேர்வு தொடர்ந்து 17ஆவது முறையாகச் செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு அதேநாளில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் முதன்முதலில் 1993ஆம் ஆண்டில் ‘ஐஎம்ஓ’ அமைப்பில் உறுப்பினராகத் தேர்வானது.

அனைத்துலகக் கடல்சார் அமைப்பின் ஓர் உறுப்பினராகப் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துச் செயல்பாடுகளை மேம்படுத்தப் பங்களித்து, நிலைத்தன்மையான நடைமுறைகளை ஊக்குவித்து நமது குடியரசு தமது கடமையை ஆற்றியுள்ளது என்று அமைப்பு விளக்கியது.

போக்குவரத்து அமைச்சின் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், தமது அமைச்சு மற்றும் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணைய அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவுக்குத் தலைமைதாங்கி பிரிட்டன் சென்றிருந்தார்.

“ஐக்கிய நாட்டு அனைத்துலக கடல்சார் அமைப்பில் உறுப்பினராகக் கடமையாற்றுவதில் சிங்கப்பூர் பெருமையடைகிறது. அமைப்பின் உறுப்பினராக விளங்கும் நாடுகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, வருங்கால உலகின் கப்பல் போக்குவரத்தை வடிவமைக்கும் முக்கியப் பணிகளை மேற்கொள்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று திரு ஜெஃப்ரி சியாவ் கூறினார்.

உலகின் பரந்த பிரநிதித்துவம் கொண்ட உறுப்பினர் நிறைந்த ஒன்றாக இந்த அமைப்பு விளங்குகிறது. கடல் போக்குவரத்துமீது சிறப்பு கவனம் உள்ள நாடுகள் இந்த உறுப்பினர் தேர்வை நடத்தியிருக்கின்றன. தேர்வில் சிங்கப்பூர் ஆக அதிக வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் விவரித்தார்.

ஆசியான் கூட்டமைப்பின் உறுப்பினர் நாடுகளான மலேசியா, பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா ஆகிய நாடுகளும் தேர்வு செய்யப்பட்ட 20 நாடுகளில் அங்கம் வகிக்கின்றன. எனவே, சிங்கப்பூர் உட்பட ஆசியானின் நான்கு நாடுகளும் அனைத்துலகக் கடல்சார் அமைப்பில் ‘சி’ பிரிவு உறுப்பினர்களாகத் தொடர்கின்றன.

ஐக்கிய நாட்டு கடல்சார் அமைப்பு ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுக்கும் உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளது. ஒரு பிரிவில் மொத்தம் 10 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கும். கப்பல் சேவைகள், அனைத்துலகக் கடல்சார் வர்த்தகம் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களை மேம்படுத்த அவை கடமையாற்றும்.

ஐஎம்ஓ 1948ஆம் ஆண்டில் கடல்சார் நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு நிறுவப்பட்டு, தற்போது அதில் 176 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

குறிப்புச் சொற்கள்