தொழில்நுட்பத்தாலும் கொள்கை மாற்றங்களாலும் உலகம் வேகமாக மாறினாலும், சிங்கப்பூர் அதற்குத் தயாராக இருப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
தெக் கீயில் சனிக்கிழமை (பிப்ரவரி 22) நடந்த கல்வி விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், வரும் ஆண்டுக்கும் எதிர்காலத்துக்கும் அரசாங்கத்திடம் திட்டங்கள் இருப்பதாகச் சொன்னார். ஆனால், மக்கள் அதற்கு ஓரணியாகத் திரள வேண்டும் என்றார் அவர்.
அண்மையில் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் வரவுசெலவுத் திட்ட உரையில், அத்திட்டங்களில் சில வெளியிடப்பட்டதை திரு லீ சுட்டினார்.
வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவது போன்ற உடனடித் தேவைகளும் மக்கள், உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வது உள்ளிட்ட நீண்டகாலத் திட்டங்களும் அவற்றில் அடங்கும்.
உலகச் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதாக திரு லீ குறிப்பிட்டார். புதிய அமெரிக்க அரசாங்கம், உலகம் குறித்து அடிப்படையிலேயே மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டுள்ளதையும் கொள்கைகளில் அதிரடி மாற்றங்கள் செய்துள்ளதையும் அவர் சுட்டினார். இவை, உலகெங்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
ஐரோப்பாவின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்திருக்காமல் தங்கள் தற்காப்புச் சுமையை தாங்களே சுமக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது.
நீண்டகால, அடிப்படைக் கொள்கைகளை மறுஆய்வு செய்யும் நிலைக்கு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களை இது தள்ளியுள்ளதாக திரு லீ சொன்னார்.
வர்த்தகக் கொள்கையைப் பொறுத்தமட்டில், அமெரிக்கா அதன் வர்த்தகப் பங்காளித்துவ நாடுகள் மீது பரவலான வரிகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது. அவ்வாறு நடந்தால் அமெரிக்காவில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பணவீக்கம் அநேகமாக அதிகரிக்கும் என்றார் திரு லீ.
தொடர்புடைய செய்திகள்
“நிலவரம் எவ்வாறு அமையும், இது சிங்கப்பூரை எப்படி பாதிக்கும் என்பதை எங்களால் சரியாகச் சொல்ல இயலாது. ஆனாலும், சிங்கப்பூர் வேறுபட்ட சூழலைச் சந்திக்கப் போகிறது என்பது ஓரளவு நிச்சயமாகக் கூற முடியும்.
“எனினும், நாம் கவலைப்படவோ பயப்படவோ தேவையில்லை. நாம் எதற்கும் தயாராக மட்டும் இருக்க வேண்டும்,” என்று திரு லீ கூறினார்.
இதுபோன்ற சூழல்களுக்காக அரசாங்கம் நீண்டகாலமாகவே தயாராக இருந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர் முன்னேறிச் செல்ல வகைசெய்யும் சிறந்த திட்டங்கள் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் சொன்னார்.
“சவால் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் இந்தத் திட்டங்கள் மூலம் நம்மால் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல முடியும்.
“ஆனால், அரசாங்கமாக மட்டும் நாங்கள் இதைத் தனியாகச் செய்துவிட முடியாது. சிங்கப்பூரர்களும் அவர்களின் பங்கையாற்ற வேண்டும். ஒன்றுபட்ட மக்களாக தொடர்ந்து இருந்து, ஆற்றலுடைய அரசாங்கத்திற்குப் பின்னால் ஓரணியாகத் திரள வேண்டும்,” என திரு லீ அறைகூவல் விடுத்தார்.

