பருவநிலை சீற்றத்தால் பெரும்பாதிப்படைந்துள்ள ஆசிய நாடுகளில் சேவையாற்றும் சக அமைப்புகளுக்கு ஆதரவாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $250,000 நன்கொடை வழங்கவுள்ளது.
வெள்ளத்தாலும் புயலாலும் வாடும் மக்களைச் சமாளிக்க அரசாங்கங்கள் போராடிவரும் வேளையில் இந்த உதவிக் கரத்தை சிங்கப்பூரின் சங்கம் நீட்டியுள்ளது.
இலங்கை, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் இயங்கும் செஞ்சிலுவைச் சங்கங்கள் தலா $50,000 தொகையைப் பெறும். அத்தொகை உடனடி நிவாரண மீட்பு முயற்சிகளைப் பூர்த்தி செய்ய பேருதவியாக அமையும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் திங்கட்கிழமை (டிசம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பருவமழை, புயல், சூறாவளி, நிலச்சரிவு ஆகிய பேரிடர்கள் தென்கிழக்காசிய வட்டாரத்தை பாதித்துள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து, வீடுகள் தரைமட்டமாகி, ஆயிரக்கணக்கானோர் இடமாற்றம் செய்யப்பட்டு, முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
அந்தந்த நாடுகளிலும் செஞ்சிலுவைச் சங்கங்கள் பாதிப்படைந்த இடங்களில் கடுமையான சூழ்நிலைகளில் செயலாற்றுகின்றன. மாநிலங்கள், மாவட்டங்கள் வாயிலாக உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிவாரண மையங்களை வழிநடத்த அவை உதவிவருகின்றன. பொதுமக்கள் இடம்பெயர்தலிலும் அவை ஈடுபடுகின்றன. அவசரகால உணவு, குடிநீருடன் அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்து சுகாதார, மருத்துவ உதவிகளையும் செய்கின்றன.
பாதிப்படைந்த இடங்களில் தேடுதல், மீட்புப் பணிகளிலும் சங்கங்கள் பணியாற்றுகின்றன. பல நேரங்களில் சேதமடைந்த இடங்களில் சுத்தம் செய்யும் வேலைகளிலும் உறுப்பினர்கள் உதவுகின்றனர்.
தாய்லாந்தின் சங்கத்துடன் சிங்கப்பூர் சங்கம் தொடர்பில் இருந்துவருகிறது. வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்ட ஹாட்யாய் நகர மக்களுக்கு உதவுவதற்கு அங்குள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் சிங்கப்பூர் சங்கம் ஒருங்கிணைந்தது. அங்கு சிக்கிய சிங்கப்பூரர்களை கண்டறிந்து நாடு திரும்ப உதவியதும் அதில் உள்படும்.
தொடர்புடைய செய்திகள்
“ஆசிய நாடுகளின் மக்கள் பருவநிலையால் விளைந்த பேரிடர்களில் சிக்கித் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து வாழ்க்கை வசதிகளைத் தொலைத்துள்ளன. எங்களது சக செஞ்சிலுவைச் சங்கங்கள் முக்கிய உதவிகளை வழங்க முன்னிலையில் செயலாற்றுகின்றன. அவர்களுடன் நாங்களும் இருக்கிறோம்,” என்றார் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத் தலைவரும் பொதுச் செயலாளருமான திரு பெஞ்சமின் வில்லியம்.

