நூறு குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம்

2 mins read
390aa79f-a46c-4eac-80a1-5705a8aa5d9e
தொடக்க விழாவில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். - படங்கள்: சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம்

சவாலான பின்னணியைக் கொண்ட, பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்காகச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘இள உள்ளங்கள்’ (யங் ஹார்ட்ஸ்) திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட மொத்தம் $36,000 திரட்ட இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.

‘60 விளக்குகள், ஓர் எதிர்காலம்’ எனும் அம்முயற்சிக்காக அறுபது தனிமனிதர்கள், குடும்பங்கள், கலைஞர்கள், சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளனர்.

‘எஸ்ஜி60’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘60 விளக்குகள், ஓர் எதிர்காலம்’ முன்முயற்சி நவம்பர் 13ஆம் தேதி சிட்டி ஸ்குவேர் மால் கடைத்தொகுதியில் தொடங்கியது.

அத்திட்டத்தின்கீழ், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஓராண்டுக்கு $6,000 மதிப்புள்ள கல்வி, கல்வி சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் கவனிப்பைப் பெறுவர்.

தொடக்க விழாவில் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

உதவிபெறும் சில மாணவர்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான்.
உதவிபெறும் சில மாணவர்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான். - படங்கள்: சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம்

“இதுபோன்ற முயற்சிகள் சிங்கப்பூரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் குடிமைப் பங்களிப்பைப் பறைசாற்றுகின்றன,” என்று பாராட்டினார்.

கல்வி தவிர, நிதியுதவி பெறும் குழந்தைகளின் உணவும் ஊட்டசத்தும் கவனிக்கப்படும் என்று சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.

“வளரும் இந்தக் குழந்தைகளுக்கு நாளடைவில் தொழில் ஆலோசனை, வேலைப் பயிற்சி போன்றவற்றையும் அளிக்க விரும்புகிறோம்,” என்றார் திரு பெஞ்சமின்.

நிதி திரட்டும் அறுபது பேரில் ஒருவர் ‘ஆர்டிக்’ நிறுவனத்தின் உரிமையாளர் சரண்யா நரேஷ்.

ஈராண்டுகளுக்குமுன் தமது கலை ஆர்வத்தினால் ‘ஆர்டிக்’ நிறுவனத்தை தொடங்கினார் சரண்யா. கையால் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கலைப்படைப்புகள் வழி சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘யங் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் கலைப்படைப்புகள் விற்பனைமூலம் கிடைக்கும் தொகையில் 20% இந்த முயற்சிக்குச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியையும் சரியான ஊட்டச்சத்தையும் பெறும் உரிமை உண்டு. இந்த முயற்சியின் மூலம் அதை நான் மிகவும் வலுவாக ஆதரிக்க விரும்புகிறேன்,” என்றும் திருவாட்டி சரண்யா சொன்னார்.

‘60 விளக்குகள், ஓர் எதிர்காலம்’ முயற்சியை எடுத்துக்காட்டும் 4.5 மீட்டர் நீளமுள்ள காட்சிப் படைப்பு ஒன்றும் ஒளியூட்டப்பட்டது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களால் செய்யப்பட்ட அப்படைப்பு, சிங்கப்பூர் வரைபடத்தை சித்திரிக்கும் வண்ணம் அமைந்தது கூடுதல் சிறப்பு.

நிகழ்ச்சியின் இறுதியில் ‘கொடுப்பதன் எதிர்காலம்” என்ற தலைப்பில் ஒரு குழு கலந்துரையாடல் அங்கமும் நடைபெற்றது.

‘60 விளக்குகள், ஓர் எதிர்காலம்’ காட்சிப் படைப்பு வரும் நவம்பர் 27ஆம் தேதிமுதல் ஆர்ச்சர்ட் நூலக வளாகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்